கான்பெர்ரா,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.
தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம் பெற வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, 3வது போட்டியில் விளையாடிய விதத்திற்கு இந்தியா தங்களுடைய தலையை பெருமையுடன் நிமிர்த்தலாம். குறிப்பாக ஜடேஜா சிறப்பாக விளையாடினார்.
ஆனால் ஏற்கனவே நான் குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் எப்படியாவது விளையாட வேண்டும் வெளிப்படையாக தெரிவித்துள்ளேன். அவரைக் கொண்டு வாருங்கள். ஆனால் எப்படி என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பவுலிங் செய்து கணிசமான ரன்கள் குவித்தார். அதே போல ஜடேஜா அபாரமாக பேட்டிங் செய்தார். கடந்தக் காலங்களில் நிறைய போட்டிகளில் அவர் இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தியாவை வெற்றி பெற வைத்துள்ளார்.
கடந்தப் போட்டியில் எதிர்ப்புறம் யாராவது விக்கெட்டை விடாமல் விளையாடிருந்தால் ஜடேஜா ஜடேஜா இந்தியாவை வெற்றி பெற வைத்திருப்பார். ஆனால் போராடித் தோல்வியை சந்தித்த அவருக்காகவும் இந்தியாவுக்காகவும் நான் வருந்தினேன் .அது போன்ற போட்டிகள் உங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.