மும்பை,
மராட்டியத்தில் மும்மொழி கொள்கை விவகாரத்தில் இந்தி மொழி மற்றும் மராத்தி மொழி இடையே நிறைய சர்ச்சைகள் நிலவி வருகிறது. இந்தி ெமாழி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உத்தவ்தாக்கரே மற்றும் ராஜ்தாக்கரே இணைந்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மாநில அரசு இந்தி மொழி அரசாணையை திரும்ப பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் தானே மாவட்டம் மிராபயந்தரில் நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே பொதுக்கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தின் போது இந்தி மொழி திணிக்கப்பட்டால் பள்ளிகளை மூடுவோம் என கடும் எச்சரிக்கை விடுத்தார்.
மராட்டியத்தில் வாழ வேண்டுமெனில் மராத்தியை கற்று கொள். இல்லையெனில் உங்கள் மீது தாக்குதல் நடைபெறும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். இவரது பேச்சு மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ராஜ்தாக்கரேவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் கன்ஷ்யாம் உபாத்யாய் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவில் ராஜ்தாக்கரே வன்முறையை தூண்டவும், இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்புவதாகவும், மொழி பிரச்சினை தொடர்பாக மராட்டியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். இதனால் ராஜ்தாக்கரே மற்றும் அவரது கட்சி தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.