புதுடெல்லி: பிரிட்டன், மாலத்தீவில் பிரதமர் மோடி 4 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். அந்த நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். பிரதமரின் இந்த பயணத்தின்போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி பிரிட்டன் செல்கிறார். பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் அழைப்பை ஏற்று பயணம் மேற்கொள்ளும் மோடி, அங்கு 23, 24-ம் தேதிகளில் பல்வேறு தலைவர்களை சந்திக்கிறார்.
இரு நாட்டு உறவுகள் குறித்து பிரதமர் ஸ்டார்மெருடன் பேசுகிறார். அப்போது, வர்த்தகம், பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு, புதுமை திட்டங்கள். கல்வி உட்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
பிரிட்டன் மன்னர் சார்லஸையும் மோடி சந்திக்க உள்ளார். கடந்த 2018 முதல், பிரதமர் மோடி பிரிட்டன் செல்வது இது 4-வது முறை.
பிரிட்டன் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி 25-ம் தேதி மாலத்தீவுக்கு செல்கிறார். மாலத்தீவு அதிபர் மொகமத் முய்சு கடந்த 2024 அக்டோபரில் இந்தியா வந்த போது, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, பிரதமர் மோடி அந்த நாட்டுக்கு செல்கிறார். 26-ம் தேதி நடைபெற உள்ள மாலத்தீவு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இந்த பயணத்தின்போது. விரிவான பொருளாதார ஒத்துழைப்பு, இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி அதிபர் முய்சு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டன் – இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அதன் தொடர்ச்சியாக, கடந்த மே மாதம் இரு நாடுகளும் தடையற்ற வர்த்தகத்துக்கு கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டன. பிரதமர் மோடியின் பிரிட்டன் பயணத்தின்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
அப்படி ஒப்பந்தம் ஏற்பட்டால், இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 99 சதவீதம் வரி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் பயனடைவார்கள். அதேபோல, பிரிட்டனில் இருந்து இந்திய சந்தைகளுக்கு விஸ்கி மதுபான வகைகள் வரத்து, ஆட்டோமொபைல், நிதி சேவைகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.