'எனக்கும் என் கணவருக்கும் இடையேயான 50 வருட வாழ்வு ..'- `அவரும் நானும்' நூல் பற்றி துர்கா ஸ்டாலின்

கடந்த சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்து ஒத்தி வைக்கப்பட்ட துர்கா ஸ்டாலின் எழுதிய `அவரும் நானும்’ (இரண்டாம் பாகம்) நூலின் வெளியீட்டு விழா இன்று (ஜூலை 21) மாலை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

கலைமாமணி ராஜேஷ் வைத்யாவின் வீணை இசையுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பத்திரிகை ஆசிரியர்கள் என பல ஆளுமைகள் பங்கேற்றனர். இந்த விழாவில் எழுத்தாளர் சிவசங்கரி நூலை வெளியிட, டாபே குழுமத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

வரவேற்புரை ஆற்றிய கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது, “பாரதிதாசன் கூற்றுக்கு ஏற்ப எளிய மொழியில் எழுதியுள்ள இந்த நூல் ஒரு அரசியல் குடும்ப ஆவண நூல். நிபந்தனைகள் இல்லாமல் நேசிக்கும் குடும்ப உறவுகளில் அண்ணியார் அவர்கள் முதல்வருடன் தாம் பயணித்த, நேரில் கண்ட உணர்வுகளை சிறப்பான தொகுப்பாக்கியுள்ளார்கள்” என்று குறிப்பிட்டார்.

வெளியீட்டாளர் உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் பேசிய கவிஞர் மனுஷ்யபுத்திரன் ,”திராவிட இயக்கங்களைச் சார்ந்தவர்கள் மட்டும் ஏன் தொடர்ந்து எழுதினார்கள், அவரும் நானும் என்ற இந்த புத்தகம் ஏன் எழுதப்பட்டது.

பெரியார், கலைஞர் போன்ற அரசியல் ஆளுமைகள் படைத்த பல நூல்கள் இன்றும் வரலாறாக நிலைத்து நிற்பதை போன்று அண்ணியார் துர்கா ஸ்டாலின் அவர்களின் இந்த எளிய நடையிலான புத்தகம் கண்டிப்பாக வரலாற்று ஆவணமாக பிகாலத்தில் அறியப்படும். கூடவே எங்களுக்கு எதிராக எவ்வளவு பேர் அவதூறுகளை பரப்பினாலும் அவர்களுக்கு சான்றுகளைக் காட்ட எங்கள் திராவிட இயக்க தலைவர்கள் எழுதிய பக்கங்களை புரட்டி போட்டாலே போதும்.

2016ல் ஏற்பட்ட தோல்வியும் 2021 கிடைத்த வெற்றியும் அருகே கவனித்த அண்ணியாரின் பயணம் நூலில் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்து எத்தனை தலைவர்கள் இணையர்கள் இதுபோன்ற புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் குறை இல்லாமல் திருமதி துர்கா ஸ்டாலின் எழுதியுள்ள இந்த புத்தகம் திராவிட இயக்கங்களின் பின்னால் வரலாற்று ஆவணமாக பயன்படுத்தப்படும்” என்று குறிப்பிட்டார்.

நூல் அறிமுக உரை நிகழ்த்திய பத்திரிகையாளர் லோகநாயகி, “நமது முதல்வர் எங்கே போனாலும் உடனே பயணிக்கும் நமது அண்ணியார் நேரில் கண்ட, மனதை நெகிழ செய்த பல்வேறு நிகழ்வுகளை ஒளிவு மறைவு இல்லாமல் எங்களுடன் பகிர்ந்துகொண்டது எங்களின் பணியை மிகவும் எளிதாக்கியது. கணவர்களின் பணிச்சுமையை மனைவிமார்கள் புரிந்து கொண்டால் கணவர்களுக்கு எந்த கடினமும் இருக்காது என்பதை இந்த நூலை படிக்கும் பெண்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.

2015 வரை நடந்த நிகழ்வுகளை முதல் பாகத்தில் குறிப்பிட்டுள்ளதையும் 2018 முதல் தற்போது வரையிலான நிகழ்வுகளை உள்ளடக்கி தொகுப்பாக வந்துள்ளது” என்றார். மேலும், முதல்வர்- துர்கா தம்பதியினரை ஆதர்ஷ தம்பதியினர் என்றார்.

நூலை பெற்றுக்கொண்டு பேசிய டாபே குழுமத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன்,”கற்பனைக்கு இல்லாத பொய்மை இல்லாத அழகான அரசியல் குடும்பத்தின் மறுபக்கத்தை எழுதியிருக்கும் இந்த நூல், பக்கத்திற்கு பக்கம் நேர்மறை எண்ணங்களையே உருவாக்குகிறது” என்று சிலாகித்தார்.

ஜிஆர்ஜி நிறுவனங்களின் தலைவர் நந்தினி ரங்கசாமி, “சிறு குடும்பத்தைச் சார்ந்த பல பெண்கள் அணுக முடியாத இடத்தில் இருக்கும் போது எப்போதுமே ஒரு புன்னகையுடனும் தோழமையுடனும் தோழியாக அரவணைத்து செல்லும் துர்கா ஸ்டாலினின் குடும்ப பயணம் மிக எளிய நடையில் அழகான புகைப்படங்களுடன் கோர்வையாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு ரொமாண்டிக் நாவல் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நூல் துர்கா ஸ்டாலின் அவர்கள் நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்வதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. இல்லத்தரசிகள் தான் குடும்பத்தின் சிஇஓ-க்கள்” என்று கூறினார்.

நீதியரசர் பவானி, திராவிட கொள்கைகள் பற்றியும்… துர்கா ஸ்டாலின் அவர்களுடனான நட்பையும், துர்கா ஸ்டாலின் நூலில் வர்ணிக்கப்பட்டுள்ள அனைத்து நிகழ்வுகளையும் கவிதை நடையில் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்த, `இது கதை அல்ல நிஜம்’ என்றார்.

நூலை வெளியிட்டு பேசிய எழுத்தாளர் சிவசங்கரி, “இந்த புத்தகத்தைப் பற்றி மூன்று விஷயங்கள்… ஒன்று தலைப்பு, இன்னொன்று நடை… மூன்றாவது இதனுடைய கருத்துக்கள். புனைக்கதையை போன்று சுவாரசியம் மிக்க ஆனால் உண்மையான உள்ளடக்க கருத்துக்கள் கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு ஆர்வமாக தலைப்பே நம்மை படி, படி என்று சொல்லும் அளவிற்கு இந்த இரண்டாம் பாகம் இருக்கிறது.

ஏதோ நம்ம தோழி நம்ம கையைப் பிடித்து கதை சொல்வது போல் எளிய முறையில் வேஷம் போடாத எழுத்துக்களால் வெளிப்படையான கருத்துக்களாலும் பொய் பீடிகை இல்லாமல் எழுதப்பட்டிருப்பதை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும், ” என்றார். கூடவே ஸ்டாலின் வீட்டில் செய்த உதவிகள் , துர்காவும் செந்தாமரையும் சேர்ந்து நடத்தும் முதியோர் இல்லம் குறித்து குறிப்பிட்டவர், “முதல்வரின் கொள்கைக்கு நேர் மாறாக இவரது கொள்கை இருந்தாலும்… தான் வணங்கும் தெய்வங்கள் பற்றியும் போகும் கோயில்கள் பற்றியும் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளது முதல்வர் அவர்களுக்கு கொடுத்த எழுத்துச் சுதந்திரம்” என்று கூறினார்.

இறுதியாக ஏற்புரை வழங்கிய துர்கா ஸ்டாலின், “தளபதியும் நானும்” என்று இருந்த இந்த புத்தகம் “அவரும் நானும்” என்று மாறியதை குறிப்பிட்டு , “எனக்கும் என் கணவருக்கும் இடையேயான 50 வருட வாழ்வின் பல தருணங்களை தொகுப்பாக்கிய இந்த புத்தகத்திற்காக கட்சி தலைவராகவும் முதல்வராகவும் இருந்தாலும் கடுமையான பணிச்சுமைகளுக்கு இடையே எனக்காக நேரம் ஒதுக்கி புத்தகத்தில் உள்ளவற்றை சுட்டிக்காட்டிய… இந்த புத்தகம் வெளிவர முழு காரணமாக இருந்த எனது கணவருக்கும் முதல் நன்றி.

முதல் பாகம் வெளிவந்தபோது சிறு குழந்தைகளாக இருந்த எனது பேரக்குழந்தைகள் இன்று இந்த புத்தகத்தை மேடையில் பெற்றுக்கொண்டதில் பாட்டியாக முழு திருப்தி அளிக்கிறது . சிறுவயதில் நான் விரும்பி படித்த எழுத்தாளர் சிவசங்கரி மூலம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டது ரொம்பவே சிறப்பு” என்றார்.

அணியுரை எழுதிய இறையன்பு மற்றும் மேடையை பகிர்நதுகொண்ட பெண் ஆளுமைகள் உடன் தனக்கு இருக்கும் தோழமையை குறிப்பிட்டு இந்த நூல் வெளிவர காரணமாக இருந்த அனைவரையும் தன் உரையில் பாராட்டி , 2021 ஆம் ஆண்டு ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு நடந்த அனைத்து நிகழ்வுகளையும் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளோம் என்று எளிமையாக சுருக்கமாக முடித்தார் .

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.