மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றியை பெற்று தந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இருவரும் சமீபத்தில் அறிவித்தனர்.
இந்த முடிவு அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருவரும் விளையாடுவர்கள் என எதிர்பார்த்த வேளையில் இருவரும் அடுத்தடுத்து ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தனர்.
இதனையடுத்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட உள்ள அவர்கள் அடுத்த உலகக்கோப்பை (2027) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளனர். இருப்பினும் அவர்களால் ஒருநாள் உலகக்கோப்பை வரை தொடர்ந்து பார்மில் இருக்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.
அந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஏறக்குறைய 27 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. அந்த போட்டிகளில் இருவரும் தொடர்ந்து அசத்தினால் மட்டுமே உலகக்கோப்பை வரை இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாடுவது சந்தேகம் என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதற்கு ஐ.பி.எல். தொடரில் மகேந்திரசிங் தோனி விளையாடுவதை உதாரணமாக தெரிவிக்கும் ஹர்பஜன் இது குறித்து பேசியது பின்வருமாறு:-
“உண்மையில் உலகக்கோப்பை தொலைவில் இருக்கிறது. அதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. அவர்கள் வேறு வடிவிலான போட்டிகளில் (டி20 மற்றும் டெஸ்ட்) விளையாடவில்லை. நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருந்தாலும் அல்லது எவ்வளவு பெரிய சிறந்த வீரராக இருந்தாலும், தொடர்ச்சியாக விளையாடா விட்டால் இது மிகவும் கடினமாகிவிடும். நீங்கள் தொடர்ந்து விளையாடவில்லை என்றால், விளையாட்டு முன்னேறிச் சென்று நீங்கள் பின்தங்குவீர்கள்.
எடுத்துக்காட்டாக ஐ.பி.எல்.தொடரில் மகேந்திரசிங் தோனி தற்போது விளையாடுவதை பாருங்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் அவரது செயல்திறனைப் பாருங்கள். இந்த தோனிக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடியபோது இருந்த தோனிக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்களே பார்க்க முடியும்” என்று கூறினார்.