ஸ்ரீராம் கேபிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2வது சீசன், சீகெம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (ஜூலை 21) நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணியும், கடைசி இடத்தில் உள்ள காரைக்கால் நைட்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற காரைக்கால் நைட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது தவறான முடிவாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முஹமது அக்கிப் ஜவாத் 3, லக்ஷ்மி நிஷாங்க் 2, நிதேஷ் செதாய் 18, பூபேந்த சவுகான் 0, பிரணவ் சோப்ரா 0, விக்னேஷ்வரன் மாரிமுத்து 13 என அடுத்து வெளியேறினர்.
இதனால், 7.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து அங்கித் சர்மா மற்றும் வாசிஃப் முகடம் இருவரும் இணைந்து 42 ரன்கள் பாட்னர்ஷ்ப் அமைத்தனர். பின்னர், அங்கித் சர்மா 28 ரன்களிலும், வாசிஃப் அகடம் 24 ரன்களிலும் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் காரைக்கால் நைட்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ஹிதேஷ் படேல் 21 ரன்களுடனும், அமன் எஃப் கான் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஊசுடு அணி தரப்பில் சிதக் சிங் மற்றும் சாயி சரண் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனைத்தொடர்ந்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஊசுடு அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இடையிடையே விக்கெட்டுகள் விழுந்தாலும் அபாரமாக ஆடிய சைலேஷ் வைத்தியநாதன் 41 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அவருக்கு உறுதுணையாக, கிருஷ்ணா பாண்டே 31 ரன்களும், புனீத் திரிபாதி 25 ரன்களும் எடுத்து அணியை வெற்றிபெற செய்தனர்.
ஆட்டநாயகன் விருது சிதக் குருவிந்தர் சிங்கிற்கு வழங்கப்பட்டது. பின்னர் இது குறித்து கூறிய சைலேஷ் வைத்தியநாதன், ”சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு முன்னதாக 49 ரன்கள் எடுத்தபோது, அரைசதத்தைப் பற்றி யோசிக்காமல் ஆடினேன். இன்றைக்கு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பிளேஆஃப் சுற்றுக்குள் செல்ல வேண்டும் எனக் கருதி அரைசதம் அடித்தேன்.
சிதக் சிங் மற்றும் சாயி சரண் இருவரும் அற்புதமாக பந்துவீசினர். அணியினர், அணி நிர்வாகத்தினரும் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்றும் மிகுந்த நம்பிக்கையோடு உள்ளனர்” என்றார். ஊசுடு அணி 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் மற்றும் 6 தோல்விகளுடன் 5ஆவது இடத்தில் உள்ளது. அதே சமயம் காரைக்கால் அணி 9 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் மற்றும் 7 தோல்விகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெளியேறியது.
மேலும் படிங்க: புதிய கிரிக்கெட் அணியை வாங்கிய காவ்யா மாறன்.. இத்தனை கோடியா?
மேலும் படிங்க: Ind vs Eng Test Series: தொடரை வெல்லப்போவது இந்த அணிதான் – சுரேஷ் ரெய்னா கணிப்பு!