Pertol Diesel Price: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக வெற்றி பெற்று, ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து உலக பொருளாதாரம் பெரியளவில் ஆட்டம் கண்டு வருகிறது எனலாம்.
அமெரிக்கா பொருள்களுக்கு வரி விதிக்கும் நாடுகளின் மீதே அதே சதவீதத்தில் வரி விதிப்பது (Reciprocal Tariff) தொடங்கி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவர் எப்போதுமே தன்னை அரசியல்வாதியாக முன்னிலைப்படுத்துவதை விட ஒரு பெரும் தொழிலதிபராகவே முன்னிலைப்படுத்துவார். அமெரிக்காவின் கஜானாவை வரிகளின் மூலம் நிரப்புவதே இவரின் திட்டமாக இருக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் பிரச்னையில் டிரம்ப்
பொருளாதார நடவடிக்கை ஒருபுறம், சர்வதேச விவகாரங்களில் தலையீடு செய்து அதன்மூலம் நல்ல பெயரை சம்பாதிக்கவும் அவர் முயல்கிறார். உதாரணத்திற்கு, கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, போர் நிறுத்தத்தை முதலில் அறிவித்தது டிரம்ப்தான் . இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தை தணித்தது நான்தான் என அவரே பல சந்தர்பங்களில் கூறிவந்தார். ஆனாலும், போர் நிறுத்தத்தில் டிரம்பின் பங்கு குறித்து இந்தியா தரப்பில் இதுவரை யாரும் பெரியளவில் உறுதிப்படுத்தவே இல்லை.
ரஷ்யாவுக்கு அமெரிக்கா போடும் தடை
அதேபோல், ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் 50 நாள்களில் நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் ரஷ்யா அதை ஏற்கவில்லை. 50 நாள்களில் போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவிக்காவிட்டால் ரஷ்யாவின் மீது கடுமையான வரி சுமத்தப்படும் என்றும் ரஷ்யா உடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கும் 100% வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு மறைமுகமாக இந்தியாவை கடுமையாக பாதிக்கும் எனலாம். இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தற்போது அதிகளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. இந்தியாவை மட்டுமின்றி சீனா, பிரேசில் போன்ற நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்துதான் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதால் அந்த நாடுகளையும் அமெரிக்கா குறிவைக்கும் எனலாம்.
40% வரை இறக்குமதி
இந்தியா ரஷ்யாவிடம் மிக குறைந்த செலவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. இந்தியா தனது சுமார் 40% கச்சா எண்ணெய் தேவையை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்துகொள்கிறது. போரை நிறுத்த ரஷ்யா தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், டிரம்ப் அதிக வரியை இந்தியாவின் மீது சுமத்தும்பட்சத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டி வரும். அதுமட்டுமின்றி தனது தேவைக்கான மாற்று வழிகளையும் இந்தியா யோசித்தாக வேண்டும்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை நிறுத்தினால் ஒட்டுமொத்த விநியோக சங்கிலியும் பாதிப்படையும். அது பாதிப்படைந்தால் உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகமாகும், இதனால் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
ரூ.10 வரை உயர வாய்ப்பு
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி கூறுகையில், “ரஷ்யா ஒட்டுமொத்த உலக நாடுகளின் கச்சா எண்ணெய் தேவையில் 10% அளவிற்கு பங்களிக்கிறது. இதில் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை உலக நாடுகள் நிறுத்திவிட்டால் மீதம் 90% பங்களிப்பவர்களிடம் இருந்தே கச்சா எண்ணெய்யை பெற வேண்டும். இதனால் தானாகவே விலை உயரும். இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.8 முதல் ரூ.10 வரை உயர வாய்ப்புள்ளது” என்றார்.
போரை பயன்படுத்திக்கொண்ட இந்தியா
தற்போது ரஷ்யாவிடம் இருந்து அதிகளவு இறக்குமதி செய்யும் நாடுகள் இந்தியாவும் சீனாவும்தான். இந்தியா அதன் கச்சா எண்ணெய் தேவையில் 88% இறக்குமதியையே நம்பி இருக்கிறது. ரஷ்யா அதன் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 38% அளவிற்கு இந்தியாவுக்கு அளிக்கிறது. ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கும் முன் அதாவது 2022இல் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தனது தேவைக்கு 2% அளவிற்கு மட்டுமே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துவந்தது. போரினால் ரஷ்யா மீதான தடைகளை பயன்படுத்திக்கொண்ட இந்தியா, குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய தொடங்கியது.
கச்சா எண்ணெய் விலையும் உயரும்
சமீபத்தில் இதுகுறித்து பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “உலகில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்று ரஷ்யா. அந்நாடு ஒருநாளுக்கு சுமார் 9 மில்லியன் பேரல்களை தயாரிக்கிறது. உலக நாடுகளில் தேவையில் 10% அதாவது 97 மில்லியன் பேரல்களை ரஷ்யா ஏற்றுமதி செய்து வருகிறது. அமெரிக்காவின் இந்த தடைகளால் ரஷ்யா சந்தையில் இருந்து வெளியேறும்பட்சசத்தில் எண்ணெய் விநியோகம் குறையும். இதனால் கச்சா எண்ணெய் விலை உயரலாம். ஒரு பேரல் கச்சா எண்ணெய் 130-140 அமெரிக்க டாலர் அளவிற்கு உயரலாம்” என்றார்.
அடுத்த இந்தியாவுக்கு என்ன பிளான்?
அமெரிக்கா – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான இந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க இந்தியா புதிய வழிமுறையையும் யோசித்தாக வேண்டும். இதுகுறித்து ஹர்தீப் தி் பூரி கூறுகையில், “முன்னர் இந்தியா 27 நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தது, தற்போது 40 நாடுகளிடம் இருந்து வாங்குகிறது. அதில் ரஷ்யாவின் பங்கே அதிகம். இந்த தடை தொடர்ந்து விநியோகச் சங்கிலியில் பாதிப்பு இருக்கும்.
ஒன்று அமெரிக்க உடனான ஒப்பந்தமும் தடைப்படும், மறுபுறம் கச்சா எண்ணெய் குறித்து அமெரிக்க புதிய முடிவை எடுக்கலாம். எனினும் எங்கெல்லாம் கச்சா எண்ணெய் குறைந்த விலையில் கிடைக்கிறதோ அங்கிருந்தெல்லாம் இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்கும்”என்றார்.
மேலும் படிக்க | ஏர்டெல் சிம் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு ரூ.17,000 இலவசம்! எப்படி பெறுவது?
மேலும் படிக்க | ஒரே பெண்ணை திருமணம் செய்த சகோததர்கள்! காரணம் கேட்டால் அசந்து போவீர்கள்!
மேலும் படிக்க | பெங்களூரு பரிதாபங்கள்: ‘தோழி துபாய்கே போய்விட்டாள்… நான் இன்னும் வீடு போய் சேரல…’