டாக்கா,
வங்காளதேச விமானப்படைக்கு சொந்தமான எப்-7 பி.ஜி.ஐ. பயிற்சி விமானம், இன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற நிலையில், மதியம் 1.06 மணியளவில் அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து டாக்காவில் உள்ள உத்தாரா பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரி வளாகத்திற்குள் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்து நடந்த சமயத்தில் கல்லூரியில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 100 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.