India vs England 4th Test Rain Chance: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் (Anderson Tendulkar Trophy) கடந்த ஒரு மாதமாக இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்தியா 1-2 என்ற கணக்கில் தொடரில் பின்தங்கி உள்ளது.
முதல் போட்டி லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்திலும், 2வது போட்டி பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்திலும், 3வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்திலும் நடைபெற்றன. இந்திய அணி வரலாற்றில் முதல்முறையாக எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் டெஸ்ட் வெற்றியை இத்தொடரில் பதிவு செய்தது. ஆனால், ஹெடிங்லியிலும், லார்ட்ஸிலும் தோல்வியை தழுவியது.
India vs England: இந்தியா அணிக்கு ராசியில்லாத ஓல்ட் டிராஃபோர்ட்
அந்த வகையில், நாளை (ஜூலை 23) தொடங்க இருக்கும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இங்கிலாந்தில் இந்திய அணிக்கு ராசியில்லாத மைதானங்களில் ஒன்று ஓல்ட் டிராஃபோர்ட் எனலாம். இதுவரை இந்திய அணி இங்கு 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒன்றில் கூட வென்றதில்லை. 4 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கும் இந்தியாவுக்கு 5 போட்டிகளில் டிராவே ஆறுதலாக அமைந்திருக்கிறது. அதேபோல், வெள்ளைப் பந்து பார்மட்களில் 12 போட்டிகளை விளையாடி 6இல் வென்றிருக்கிறது.
India vs England: மறக்குமா நெஞ்சம்…
ஆனால், இந்திய ரசிகர்களுக்கு ஓல்ட் டிராஃபோர்டை என்றுமே மறக்க முடியாது. 2019 உலகக் கோப்பை தொடரின்போது, நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி இங்குதான் நடைபெற்றது. மழையால் பாதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் நீண்ட அந்த போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. தோனி ரன் அவுட் ஆனது யாரை மறக்க முடியும். அதுதான் தோனியின் கடைசி சர்வதேச போட்டியாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
India vs England: 5 நாள்களும் மழைக்கு வாய்ப்பு!
அந்த வகையில், ஜூலை மாதம் – மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம் – மழை ஆகிய காம்பினேஷன் தற்போது மீண்டும் இந்தியாவை அச்சத்திற்கு உள்ளாக்க உள்ளது. ஆம், நாளை மான்செஸ்டர் நகரில் தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டியில் 5 நாள்களும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது மான்செஸ்டரில் நாளை புதன் அன்று மழைக்கு 65%, வியாழன் அன்று 40%, வெள்ளி அன்று 7%, சனி அன்று 5%, ஞாயிறு 55% மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மழையால் ஆட்டம் பெரிதும் பாதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மழை பாதித்தால் இந்த ஆட்டம் டிராவாக கூட வாய்ப்புள்ளது.
India vs England: இந்திய அணியின் கனவு நிறைவேறுமா?
ஒருவேளை இந்த போட்டி டிராவில் முடிந்தால் இந்திய அணியால் இத்தொடரை கைப்பற்றவே முடியாது. அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட 2-2 என்ற கணக்கில் தொடர் கடந்த சுற்றுப்பயணத்தை போலவே சமனில் முடியும். 2007ஆம் ஆண்டுக்கு பின் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் போய்விடும். இந்தியாவை பொறுத்தவரை இந்த போட்டியையும் அடுத்த போட்டியையும் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கு வானிலை ஒத்துழைக்குமா அல்லது 2019ஆம் ஆண்டில் செய்ததை போல் வலியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | Ind vs Eng: இந்திய அணிக்குள் வரும் சிஎஸ்கே வீரர்.. பிளேயிங் 11 இதுதான்!
மேலும் படிக்க | கருண் நாயரும் வேண்டாம், சாய் சுதர்சனும் வேண்டாம்… இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பா?
மேலும் படிக்க | IND vs ENG: தொடரை வெல்ல பென் ஸ்டோக்ஸ் எடுத்த முக்கிய முடிவு! அணியில் அதிரடி மாற்றம்!