India vs England 4th Test: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 23) தொடங்குகிறது. கடந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி ஜூலை 14ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், சுமார் 10 நாள்கள் ஓய்வுக்கு பிறகு இந்த டெஸ்ட் போட்டி நடைபெற இருப்பதால் இரு தரப்பு ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
India vs England: புதிய வியூகங்களுடன் வரும் இரு அணிகள்
மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியம் எனலாம். தற்போதைய நிலையில், ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியை இங்கிலாந்து வென்றால் தொடரை கைப்பற்றும். ஒருவேளை இந்தியா வென்றால் தொடரை சமனாக்கி அடுத்த போட்டிக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் எனலாம்.
எனவே இரு அணிகளும் தங்களின் வியூகங்களை புதுப்பித்து மான்செஸ்டரில் வெற்றிக் கொடியை நாட்ட துடிப்பார்கள். இங்கிலாந்து அணி பேஸ்பால் அதிரடி அணுகுமுறையை கையில் எடுத்த பின்னர் டிரா என்ற பேச்சுக்கு செல்லவில்லை. அந்த வகையில், இந்த போட்டியிலும் வெற்றி – தோல்வி என்ற முடிவை நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம். அவர்களின் அதிரடி அணுகுமுறைகளில் முக்கியமான ஒன்று பிளேயிங் லெவனை போட்டிக்கு முன்கூட்டியே அறிவிப்பதாகும்.
India vs England: இங்கிலாந்தின் பிளேயிங் லெவன் அறிவிப்பு
இந்நிலையில், 4வது போட்டிக்கான தனது பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி (England Playing XI) நேற்று அறிவித்தது. எதிர்பார்க்கப்பட்ட ஒரே ஒரு மாற்றத்தை மட்டுமே இங்கிலாந்து செய்திருக்கிறது. எலும்பு முறிவு காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய ஆஃப் ஸ்பின்னர் ஷோயப் பஷீருக்கு பதில், இடது கை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னரான லியம் டாவ்சன் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 8 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து அணிக்கு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
India vs England: இந்திய அணியில் ஸ்குவாடில் மாற்றம்
இந்திய அணியை பொறுத்தவரை, ஸ்குவாடிலேயே பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிதிஷ் குமார் ரெட்டியும், அர்ஷ்தீப் சிங்கும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளனர். அன்ஷுல் கம்போஜ் மட்டும் ஸ்குவாடில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆகாஷ் தீப் 4வது போட்டிக்கு உடற்தகுதியுடன் இல்லை என்றும் தெரியவருகிறது. இதனால், இந்திய அணியின் 3வது டெஸ்ட் பிளேயிங் லெவனுக்கும், 4வது டெஸ்ட் பிளேயிங் லெவனுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும் என்பது தெரிந்ததுதான். ஆனால் யார் யார் இந்த பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள் என்பதே கேள்வியாக உள்ளது.
India vs England: துருவ் ஜூரேல், அன்ஷுல் கம்போஜ் உள்ளே…
பும்ரா, சிராஜ் விளையாடுவது உறுதியாகி உள்ள நிலையில் 3வது வேகப்பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி இருக்கிறது. இதில் பிரசித் கிருஷ்ணாவுக்கும், அன்ஷுல் கம்போஜுக்கும் அதிக போட்டி நிலவுகிறது. இருவரையும் நேற்றைய வலைப்பயிற்சியில் காண முடிந்தது. இருப்பினும் இதில் அன்ஷுல் கம்போஜிற்கே அதிக வாய்ப்புள்ளது. அன்ஷுல் கம்போஜின் Seam Movement நிச்சயம் இந்திய அணியில் அவருக்கு இடத்தை பெற்றுத் தரும். ரிஷப் பண்ட் காயத்தை தொடர்ந்து ரிஷப் பண்ட் பேட்டிங் மட்டும் செய்வார், துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் கவனித்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் குல்தீப் யாதவிற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது எனலாம்.
India vs England: நம்பர் 3இல் விளையாடப்போவது யார்?
அப்படியிருக்க, நம்பர் 3 இடத்தில் விளையாடப்போவது யார் என்பதுதான் கௌதம் கம்பீருக்கும் சுப்மான் கில்லும் பெரிய தலைவலியை கொடுக்கும் கேள்வியாக இருக்கும். முதல் போட்டியில் இந்த இடத்தில் சாய் சுதர்சன் விளையாடியிருந்தார். முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டானாலும் அடுத்த இன்னிங்ஸில் ஓரளவு பொறுமையுடன் விளையாடினார். மறுபுறம், கருண் நாயர் முதல் போட்டியில் நம்பர் 6இல் இறங்கிய நிலையில் அடுத்த 2 போட்டிகளிலும் நம்பர் 3 இடத்தில் இறங்கினார்.
ஆனால் இந்த 6 இன்னிங்ஸிலும் அவரது அதிகபட்ச ஸ்கோரே 40 ரன்கள்தான். எனவே இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. ஆனால், கருண் நாயர் அனுபவ வீரர் என்பதால் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க கம்பீர் முடிவெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கில்லின் சாய்ஸ் சாய் சுதர்சன் என்றும் கம்பீரின் சாய்ஸ் கருண் நாயர் என்றும் கூறப்படுகிறது. சாய் சுதர்சனுக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது, அதே நேரத்தில் அபிமன்யூ ஈஸ்வரனுக்கோ ஒரு போட்டியில் கூட வழங்கவில்லை. எனவே இவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதே சரியாக இருக்கும்.
மேலும் படிக்க | Ind vs Eng Test Series: தொடரை வெல்லப்போவது இந்த அணிதான் – சுரேஷ் ரெய்னா கணிப்பு!
மேலும் படிக்க | 17 கிலோ உடல் எடையை குறைத்து ஆளே மாறிப்போன சர்பராஸ் கான்.. எப்படி ஆய்டாரு பாருங்க!
மேலும் படிக்க | இந்திய அணியில் பெரிய மாற்றம்… 4வது போட்டியில் விளையாடும் 11 வீரர்களின் லிஸ்ட் இதோ!