வாஷிங்டன்,
சர்வதேச நாணய நிதியத்தில் துணை நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத். பொருளாதார நிபுணரான அவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தில் தலைமைப்பொருளாதர நிபுணராக பணியில் சேர்ந்தார். இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் பதவியில் இருந்து விலகுவதாக கீதா கோபிநாத் அறிவித்துள்ளார்.
அவர் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதார பேராசிரியராக மீண்டும் பணியில் சேர உள்ளதாக தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தில் சுமார் 7 அற்புதமான ஆண்டுகளுக்கு பிறகு நான் எனது கல்வி வேர்களுக்கு திரும்ப முடிவு செய்துள்ளேன் என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் இவ்வுலகின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர். அசாத்தியான கல்வியறிவும் அறிவார்ந்த தலைமை பண்பும் கொண்டவர். மேலும் பெரிய அளவில் சர்வதேச அனுபவமும் கொண்டவர் என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநரான கிறிஸ்ட்டின் லகார்டே பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.