சாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம்: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ‘அப்ரூவர்’ ஆக மாற விருப்பம்!

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பெனிக்ஸ். இவர்கள் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு நேரம் தாண்டி செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக தந்தை, மகன் இருவரையும் போலீஸார் விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் இருவரையும் கொடூரமாக தாக்கினர். இதில் இருவரும் உயிரிழந்தனர்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தந்தை, மகன் மரணம் வழக்கு விசாரணையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, சிபிஐ-க்கு மாற்றியது. இதையடுத்து, சிபிஐ வழக்கு பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 9 பேரை கைது செய்தது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இரு கட்டங்களாக 2,427 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை யை சிபிஐ தாக்கல் செய்தது. இந்த வழக்கில் ஸ்ரீதர் உட்பட 9 பேர் கைதான நாளிலிருந்து மதுரை மத்திய சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி முத்துகுமரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்த வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அரசுக்கும், காவல் துறைக்கும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் அப்ரூவராக மாற விரும்புகிறேன்.

அப்ரூவராக மாறி இந்த வழக்கில் காவலர்கள் செய்த அனைத்து செயல்களையும் உண்மைகளையும் நீதிமன்றத்தில் கூற விரும்புகிறேன். எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தையும் மகனையும் இழந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த வழக்கில் அப்ரூவராக மாறி அரசு தரப்பு சாட்சியாக விரும்புகிறேன். அதற்கு அனுமதி வழங்க வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.