பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி’ மேற்கொள்ளப்படுகின்றது.
“தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு வீடாக மேற்கொண்ட கள ஆய்வில் வங்கதேசம், நேபாளம், மியான்மரை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருவது அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், சட்டத்துக்கு புறம்பாக தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர்கள் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது எனவும் தகவல் வெளியானது.

இந்த விவகாரம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏறபடுத்திய நிலையில், தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் சேர்ந்து எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியை குறிவைத்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ்,“மியான்மர் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கும்போது, மக்களவைத் தேர்தல் எப்படி சட்டப்பூர்வமானதாகவும், சரியானதாகவும் இருக்க முடியும்? அந்த வெற்றி செல்லுமா?
இந்தக் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா? இதன் மூலமே தெரியவில்லையா, அவர்களின் நோக்கங்கள் மோசமானவை. அவர்கள் தேர்தல்களில் மோசடி செய்ய விரும்புகிறார்கள். ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணியின் வாக்குகளை வெட்டி போலி வாக்காளர்களின் பட்டியலைத் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மகாராஷ்டிரா போன்ற ஒரு மாதிரி தயாரிக்கப்பட்டு வருகிறது.” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கிடையில், 2003-ம் ஆண்டு எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் தங்களது இந்திய குடியுரிமை மற்றும் இருப்பிடத்தை நிரூபிக்க வேண்டும் என கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் பீகாரில் வாக்காளர் திருத்தத்தின்போது ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்திருந்த தேர்தல் ஆணையம், “சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது, ஆதார் அட்டையும், ரேஷன் கார்டும் ஒருவர் இந்தியக் குடிமகன் என்பதற்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படாது” எனக் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியின்போது 18 லட்சம் வாக்காளர்கள் இறந்ததும், 26 லட்சம் பேர் வெவ்வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்திருக்கிறது. 7 லட்சம் பேர் இரண்டு இடங்களில் வாக்குறுமை பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. மொத்தம் 52 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிடப்படும். அதில் தகுதியுள்ள அனைவரும் சேர்க்கப்படுவார்கள்.” என தெரிவித்துள்ளது.