லண்டன்,
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். இதன்படி நேற்று லண்டன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை இன்று பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இந்தியா-இங்கிலாந்து இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து இந்தியா-இங்கிலாந்து இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்(Free Trade Agreement) எனப்படும் முக்கிய ஒப்பந்தம் இந்தியா-இங்கிலாந்து இடையே இன்று கையெழுத்தாகியுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை இந்தியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாகவும், அந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“இங்கிலாந்து பிரதமராக இந்தியாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொள்ள வருமாறு கெய்ர் ஸ்டார்மரிடம் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது இங்கிலாந்து மன்னரிடம் பிரதமர் மோடி ஒரு மரக்கன்றை வழங்குவார்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஒப்பந்தம் குறித்து தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்ட கெய்ர் ஸ்டார்மர், “இந்தியாவுடனான வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் இங்கிலாந்துக்கு ஒரு பெரிய வெற்றியாகும். இது கடினமாக உழைக்கும் இங்கிலாந்து மக்கள் அதிக வருமானத்தை ஈட்டவும், குடும்பங்கள் தங்கள் அன்றாட செலவுகளை சமாளிக்கவும் உதவும்” என்று பதிவிட்டுள்ளார்.