"கிரேட் அமெரிக்கன் ஐகான்" – மறைந்தார் 90s கிட்ஸ்களின் WWE நாயகன் ஹல்க் ஹோகன்; பிரபலங்கள் இரங்கல்

இன்று மிகப் பிரபலமாக இருக்கும் அமெரிக்க தொழில்முறை குத்துச்சண்டை நிகழ்ச்சியான WWE-ஐ 1980-களில் மக்களிடத்தில் பிரபலமாக கொண்டு சேர்த்தவர்களில் மிக முக்கியமானவர் ஹல்க் ஹோகன்.

Horseshoe Mustache லுக்கில் ரிங்கிற்குள் நுழைந்து பனியனை கிழிக்கும் அவரின் ஸ்டைலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவரின் உண்மையான பெயர் டெர்ரி ஜீன் போல்லியா.

Hulk Hogan - ஹல்க் ஹோகன்
Hulk Hogan – ஹல்க் ஹோகன்

ஆனாலும், WWE-ல் ஹல்க் ஹோகனாக ரசிகர்களைக் கவர்ந்த இவர், தனது உண்மையான பெயரைப் பலரும் மறக்குமளவுக்கு ஹல்க் ஹோகனாகவே அனைவர் மனதிலும் பதிந்துவிட்டார்.

தனது தொழில்முறை குத்துச்சண்டையில் (WWF/WWE) 12 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் ஹல்க் ஹோகன் 90s கிட்ஸ்களின் ஆஸ்தான WWE நாயகன்.

WWE-ல் மிகப்பெரிய கவுரமாகப் பார்க்கப்படும் ஹால் ஆஃப் ஃபேமில் 2005-ல் சேர்க்கப்பட்ட ஹல்க் ஹோகன் 2012-ல் தனது 35 வருட குத்துச்சண்டை கரியருக்கு முழுக்கு போட்டார்.

அதன்பிறகு, 2020-ல் மீண்டும் ஒருமுறை WWE ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார்.

ஹல்க் ஹோகன் அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாகப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

Hulk Hogan - ஹல்க் ஹோகன்
Hulk Hogan – ஹல்க் ஹோகன்

இந்த நிலையில், ஹல்க் ஹோகன் புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

அவரின் மறைவுக்கு அமெரிக்கப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

WWE தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “WWE ஹால் ஆஃப் ஃபேம் ஹல்க் ஹோகன் காலமானார் என்பதை அறிந்து WWE வருந்துகிறது.

பாப் கலாச்சாரத்தின் மிகவும் அடையாளம் காணக்கூடிய நபர்களில் ஒருவரான ஹல்க் ஹோகன், 1980-களில் WWE உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற உதவினார்.

இந்த நேரத்தில் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு WWE தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று பதிவிட்டிருக்கிறது.

அதேபோல், அமெரிக்க துணை குடியரசுத் தலைவர் ஜே.டி. வான்ஸ், “ஹல்க் ஹோகன் கிரேட் அமெரிக்கன் ஐகான்.

உண்மையில் நான் சிறுவயதில் போற்றிய மனிதர்களில் ஒருவர் இவர்.

கடைசியாக அவரைப் பார்த்தபோது, அடுத்த முறை பார்க்கும்போது ஒன்றாக பீர் குடிப்போம் என்று நாங்கள் உறுதியளித்தோம்.” என்று ட்வீட் செய்து ஆன்மா சாந்தியடையுமாறு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

Hulk Hogan - ஹல்க் ஹோகன்
Hulk Hogan – ஹல்க் ஹோகன்

மேலும், ஹல்க் ஹோகனுடன் WWE-ல் சண்டையிட்ட ரிக் ஃப்ளைர், ட்ரிபிள் ஹெச் உள்ளிட்ட பலரும் அவருடனான நினைவுகளைக் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஹல்க் ஹோகனின் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.