புதுடெல்லி,
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பை, தற்போதைய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி கவுன்சிலராக, மேயராக இருந்தபோது, அதிகார துஷ்பிரயோகம் செய்து, போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமைச்சர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.