துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்டர்ஸ் தரவரிசையில் இந்திய துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (727 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளில் முறையே 28, 42 ரன்களை எடுத்த அவர் தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.
ஹர்மன்பிரீத் கவுர் 5 இடம் சரிந்து 21-வது இடத்தை பெற்றுள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா 10 இடங்கள் உயர்ந்து 23-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 62, 30 ரன்கள் வீதம் எடுத்ததால் அவர் இந்த ஏற்றத்தை கண்டுள்ளார்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் (776) நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்ட்னெர், மேகன் ஸ்கட், இந்தியாவின் தீப்தி ஷர்மா ஆகியோர் முறையே 2-வது, 3-வது, 4-வது இடத்தில் மாற்றமின்றி தொடருகின்றனர்.