மான்செஸ்டர்,
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராப்போர்டில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் – ஜெய்ஸ்வால் ஜோடி அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைத்தது. இந்த ஜோடி 94 ரன்களில் பிரிந்தது. ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்த நிலையில், 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் கில் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். தமிழக வீரரான சாய் சுதர்சன், தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அரைசதம் அடித்தார். அவர் 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரிஷப் பண்ட் 37 ரன்களில் இருந்தபோது ஒரு பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆட முயற்சித்தபோது அவரது காலில் காயம் ஏற்பட்டதால், பாதியிலேயே வெளியேறினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூரும் தலா 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.