மும்பை,
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
முன்னதாக இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது காலில் காயமடைந்த ரிஷப் பண்ட் பாதியில் வெளியேறினார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ரிஷப் பண்ட், வலியையும் பொருட்படுத்தாமல் நொண்டியபடி களத்திற்கு வந்து பேட்டிங் செய்தார்.
அவரது வருகையை கண்டு உற்சாகமடைந்த இந்திய ரசிகர்கள் கைதட்டி ஆரவாரமான வரவேற்பு அளித்தனர். அப்படி ஒற்றைக்காலில் போராடி அரைசதத்தை கடந்த ரிஷப் பண்ட் 54 ரன்கள் அடித்து அணிக்கு வலுவூட்டினார். இதனால் அவரை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதனிடையே ரிஷப் பண்ட் உடனான மறக்க முடியான தருணம் ஒன்றை இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நினைவு கூர்ந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டின்போது ரிஷப் பண்ட் கைவிரலில் காயமடைந்தார். இதனால் அந்த போட்டியில் விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெல் செயல்பட்டார். ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தார்.
இந்த 4-வது போட்டிக்கு முன்னதாக ரிஷப் பண்டை சந்தித்த ரவி சாஸ்திரி, கை விரல் காயம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பண்ட் கூறிய பதில் ரவி சாஸ்திரியை நெகிழ வைத்துள்ளது.
இது தொடர்பாக ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு:- “இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்க்கு முன் ரிஷப் பண்டிடம் உன் கைவிரல் எப்படி இருக்கிறது? உடைந்து விட்டதுதானே?. உன்னால் விளையாட முடியுமா? என்றேன். அதற்கு, ‘விரல்கள் உடைந்தாலும், நான் விளையாடுவேன்’ என்று பண்ட் சொன்னார். இது அவர் விளையாட விரும்புவதை காட்டுகிறது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறார், நாட்டிற்காக விளையாடுகிறார் என்பதை இது காட்டுகிறது. அவர் ஒரு அணி வீரரா என்று யாராவது சந்தேகித்தால் அதை நேரில் காண வேண்டும்” என்று கூறினார்.