மும்பை,
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி கடந்த 2022-ம் ஆண்டு மராட்டியத்தில் தனது நடைபயணத்தின்போது ஹிங்கோலியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இந்துத்வா சித்தாந்தவாதி வீர சாவர்க்கர் குறித்து பேசினார். அவர் கூறுகையில், “வீர சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் கைகளை கூப்பி தன்னை விடுதலை செய்யுமாறு மன்றாடினார். மேலும் ஆங்கிலேய அரசுக்கு பணிந்து செயல்படுவதாக உறுதி அளித்தார்” என்று பேசியிருந்தார்.
இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாசிக்கில் வசிக்கும் தேவேந்திர பூட்டாடா என்பவர் தனது வக்கீல் மனோஜ் பிங்கலே மூலம், ராகுல்காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நாசிக் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு விசாரித்து வருகிறது.இந்த வழக்கில் நேற்று தலைமை மாஜிஸ்திரேட்டு ஆர்.சி. நர்வாடியா முன்பு ராகுல்காந்தி காணொலி காட்சி மூலம் ஆஜரானார். அப்போது அவர்தான் குற்றவாளி இல்லை என வாதிட்டதுடன், வழக்கில் ஜாமீன் கோரினார். இதையடுத்து கோர்ட்டு அவருக்கு ரூ.15 ஆயிரம் பிணையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.இதேபோன்று வீர சாவர்க்கரின் பேரன் தாக்கல் செய்த மற்றொரு அவதூறு வழக்கையும் ராகுல்காந்தி புனேயில் எதிர்கொள்கிறார்.