மான்செஸ்டர்,
இந்தியா -இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்களும், ரிஷப் பண்ட் 54 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராவ்லி – பென் டக்கட் களமிறங்கினர். இவர்களில் ஜாக் கிராவ்லி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த டக்கட் அதிரடியாக விளையாடினார். இந்திய பந்துவீச்சை திறம்பட சமாளித்த இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து அற்புதமாக விளையாடி வருகிறது.
இவர்களில் பென் டக்கட் முதலில் அரைசதம் அடித்தார். சிறிது நேரத்திலேயே ஜாக் கிராவ்லியும் அரைசதம் அடித்தார். இவர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் இந்திய அணி திணறி வருகிறது.
தற்போது வரை இங்கிலாந்து அணி 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் அடித்துள்ளது. பென் டக்கட், ஜாக் கிராவ்லி இருவரும் அரைசதம் கடந்த நிலையில் களத்தில் உள்ளனர்.