மான்செஸ்டர்,
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் (58 ரன்கள்), சாய் சுதர்சன் (61 ரன்கள்) அரைசதம் அடித்தனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (37 ரன்களில்) பந்து கால் பாதத்தில் தாக்கி காயமடைந்ததால் பாதியில் வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா (19 ரன்கள்), ஷர்துல் தாக்கூர் (19 ரன்கள்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். ஆக்ரோஷமாக பந்து வீசிய இங்கிலாந்து பவுலர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் ரன் எடுப்பதில் இந்திய வீரர்கள் தடுமாறினர். ஜடேஜா (20 ரன்கள்) ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். அடுத்து ஷர்துல் தாக்கூருடன், வாஷிங்டன் சுந்தர் இணைந்தார். நிதானமாக ஆடிய இவர்கள் ஸ்கோர் 300-ஐ தாண்ட வைத்தனர்.
அணியின் ஸ்கோர் 314 ஆக உயர்ந்தபோது ஷர்துல் தாக்கூர் 41 ரன்களில் (88 பந்துகள், 5 பவுண்டரிகள்) ஸ்டோக்சின் வேகத்தில் சரிந்தார். இதன் பின்னர் காயமடைந்த ரிஷப் பண்ட், வலியையும் பொருட்படுத்தாமல் நொண்டியபடி களத்திற்கு மெதுவாக வந்தார். அவரது வருகையை கண்டு உற்சாகமடைந்த இந்திய ரசிகர்கள் கைதட்டி ஆரவாரமான வரவேற்பு அளித்தனர். பேட்டிங்கை தொடங்கிய பண்ட், வேகமாக ஓட முடியாது என்பதால் பெரும்பாலும் பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்டுவதிலேயே கவனம் செலுத்தினார். ஆர்ச்சரின் ஓவரில் சூப்பராக ஒரு சிக்சர் தூக்கினார். ஆனாலும் அவரால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அரைசதத்தை கடந்த ரிஷப் பண்டுக்கு (54 ரன்கள்), ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் ஆப்-ஸ்டம்பு பல்டி அடித்தது.
வாஷிங்டன் சுந்தர் (27 ரன்கள்), பென் ஸ்டோக்சின் ஷாட்பிட்ச் பந்தில் வீழ்ந்தார். தொடர்ந்து புதுமுக வீரர் அன்ஷூல் கம்போஜ் (0), பும்ரா (4 ரன்கள்) விக்கெட்டுகளை இழந்தனர். முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் எடுப்பது இது 5-வது முறையாகும். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
அடுத்து தங்களது முதல் இன்னிங்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தடாலடியாக தொடங்கினர். மேகமூட்டம் கலைந்து நன்கு வெயில் அடித்ததால் ஆடுகளம் அவர்களது பேட்டிங்குக்கு அனுகூலமாக இருந்தது. இந்திய பந்து வீச்சை சர்வ சாதாரணமாக நொறுக்கிய பென் டக்கெட்டும், ஜாக் கிராவ்லியும் துரிதமாக ரன்கள் திரட்டினர். வலுவான அஸ்திவாரம் போட்ட இவர்கள் 166 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். ஜாக் கிராவ்லி 84 ரன்களில், ஜடேஜாவின் சுழலில் கேட்ச் ஆனார். பென் டக்கெட் 94 ரன்களில் (100 பந்துகள், 13 பவுண்டரிகள்) அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அன்ஷூல் கம்போஜியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜூரெலிடம் சிக்கினார்.
ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 46 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. ஆலி போப் (20 ரன்கள்), ஜோ ரூட் (11 ரன்கள்) களத்தில் உள்ளனர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.