இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை அதிரடியாக தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 94 ரன்னிலும், ஜாக் கிராவ்லி 84 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். துணை கேப்டன் ஆலி போப் (20 ரன்), முன்னாள் கேப்டன் ஜோ ரூட் (11 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் முழுமையாக கோலோச்சினர். அவர்களின் ‘விறுவிறு’ வேகத்தை இந்திய பவுலர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை. ஆலி போப், ஜோ ரூட் கூட்டணியை மதிய உணவு இடைவேளை வரை ஒன்றும் செய்ய முடியவில்லை. ‘நம்பர் ஒன்’ பவுலர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சிலும் திணறடிக்கும் அளவுக்கு வீரியம் இல்லை. இதனால் அவர்கள் சிரமமின்றி ரன் சேகரித்தனர்.
மதிய உணவுக்கு பிறகு ஸ்கோர் 341 ஆக உயர்ந்த போது ஆலி போப் 71 ரன்களில் வாஷிங்டனின் சுந்தரின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற லோகேஷ் ராகுலிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஹாரி புரூக் (3 ரன்) வாஷிங்டன் வீசிய பந்தை கிரீசை விட்டு இறங்கி வந்து அடிக்க முயற்சித்த போது ஏமாந்து ஸ்டம்பிங் ஆனார். ஹாரி புரூக் டெஸ்டில் ஸ்டம்பிங் முறையில் விக்கெட்டை பறிகொடுப்பது இதுவே முதல் முறையாகும்.
இதைத் தொடர்ந்து ஜோ ரூட்டுடன், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இணைந்தார். ஒன்று, இரண்டு ரன் வீதம் எடுப்பதில் கவனம் செலுத்திய இவர்கள் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு ஓட விட்டனர். இதனால் இங்கிலாந்து மிக வலுவான ஸ்கோரை நோக்கி பயணித்தது. அபாரமாக ஆடிய ஜோ ரூட் பந்தை பவுண்டரிக்கு தட்டிவிட்டு டெஸ்டில் தனது 38-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
மறுமுனையில் அரைசதத்தை கடந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 66 ரன்களில் (116 பந்து, 6 பவுண்டரி) தசைப்பிடிப்பால் பாதியில் வெளியேறினார். சிறிது நேரத்தில் ஜோ ரூட் (150 ரன், 248 பந்து, 14 பவுண்டரி) ஜடேஜாவின் சுழலில் ஸ்டம்பிங் ஆனார். தொடர்ந்து வந்த ஜேமி சுமித் (9 ரன்), கிறிஸ் வோக்ஸ் (4 ரன்) நிலைக்கவில்லை. அதன் பிறகு மறுபடியும் ஸ்டோக்ஸ் களம் புகுந்து ரசிகர்களை பரவசப்படுத்தினார்.
ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 135 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 544 ரன்கள் சேர்த்து, 186 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியுள்ளது. பென் ஸ்டோக்ஸ் (77 ரன்), லியாம் டாசன் (21 ரன்) அவுட் ஆகாமல் உள்ளனர். இந்திய தரப்பில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பும்ரா, முகமது சிராஜ், கம்போஜ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.இதில் பும்ராவுக்கு இங்கிலாந்து மண்ணில் இது 50-வது விக்கெட்டாக (12 டெஸ்ட்) அமைந்தது. இஷாந்த் ஷர்மாவுக்கு பிறகு இங்கிலாந்தில் 50 விக்கெட் வீழ்த்திய 2-வது இந்தியர் ஆவார்.இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.