Ind vs Eng: இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா திகழ்ந்து வருகிறார். தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ஆனால் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால், இந்திய அணி அவரை தொடர்ந்து பயன்படுத்த யோசித்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. அதையடுத்து மூன்றாவது டெஸ்ட்டில் விளையாடினார். அதில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், 4வது போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அவருக்கு ஓய்வு அளிக்காமல், 4வது போட்டியிலும் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.
முகமது கைஃப் கருத்து
அவர் இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளராக இருந்தாலும், பும்ராவின் உடல் அவரது பந்து வீச்சுக்கு முன்பை போல் ஒத்துழைப்பதில்லை. ஒரு காலத்தில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசிக்கொண்டிருந்த அவர், தற்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில்தான் சராசரியாக வீசி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் கூட அவர் வீசிய 173 பந்தில் ஒரே ஒரு பந்து மட்டுமே 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசி இருக்கிறார். இந்த நிலையில்தான், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் பும்ராவின் ஓய்வு குறித்து பேசி உள்ளார்.
பும்ரா விரைவில் ஓய்வு அறிவிப்பார்
Jasprit Bumrah Test Retirement: இது தொடர்பாக பேசிய அவர், இனி அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் பும்ரா விளையாடுவதை நம்மால் பார்க்க இயலாது என நினைக்கிறேன். ஏன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு கூட பெறலாம். நான் இப்படி சொல்வதற்கு காரணம், அவரது உடல் கடுமையான போராட்டங்களை சந்திக்கிறது. மான்செஸ்டரில் நடக்கும் 4வது டெஸ்ட்டில் அவரது பந்து வீச்சு வேகம் வெகுவாக குறைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், எந்த வீரரும் வேகமாக பந்து வீசவில்லை. பும்ரா ஒரு சுயநலம் இல்லாத வீரர். தம்மால் நாட்டுக்காக 100 சதவீத பங்களிப்பை கொடுக்க முடியவில்லை என்று நினைத்தாலோ, அணிக்கு வெற்றியை தேடி தர முடியவில்லை என்று நினைத்தாலோ அவர் நிச்சயம் ஓய்வை அறிவித்துவிடுவார்.
பும்ரா எடுத்த விக்கெட் 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பந்து. அதுவும் விக்கெட் கீப்பர் டைவ் செய்து அந்த பந்தை பிடித்தார். பும்ராவின் உத்வேகம் குறையவில்லை என்றாலும், அவர் அவருடைய உடல் தகுதியிடம் தோற்று விட்டார் என நினைக்கிறேன். அவர் வரைவில் ஓய்வு முடிவை எடுப்பார் என நினைக்கிறேன். முதலில் ரோகித், பின்னர் கோலி, அஸ்வின், தற்போது பும்ரா போன்ற வீரர்கள் இல்லாமல் நாம் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க பழக வேண்டும். என்னுடைய கணிப்பு தவறாக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை ஆனால், இந்த டெஸ்ட் தொடரை பார்க்கையில் பும்ரா மகிழ்ச்சியில் விளையாடவில்லை என்று தான் தோன்றுகிறது என முகமது கைஃப் கூறினார்.
மேலும் படிங்க: 2 மாதத்தில் 17 கிலோ எடை குறைத்த சர்ஃபராஸ் கான்! டயட் ரகசியம் இதுதான்!
மேலும் படிங்க: ரிஷப் பண்டுக்கு பதிலாக இஷான் கிஷன் இல்லை.. தமிழக வீரர் தேர்வு!