முத்தரப்பு டி20 தொடர் இறுதிப்போட்டி: தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி நியூசிலாந்து திரில் வெற்றி

ஹராரே,

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரேவில் நடைபெற்றது. இதில் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து அணி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதலிடமும், தென் ஆப்பிரிக்கா 2 வெற்றி, 2 தோல்வியுடன் 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. எல்லா ஆட்டங்களிலும் தோல்வியை தழுவிய ஜிம்பாப்வே அணி வெளியேறியது.

இதனையடுத்து இந்த தொடரின் சாம்பியன் பட்டம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் சீபெர்ட் – கான்வே களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடி நியூசிலாந்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இவர்களில் சீபெர்ட் 30 ரன்களிலும், கான்வே 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் அவருக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

சாப்மன் 3 ரன்களிலும், பிரெஸ்வெல் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனிடையே பொறுப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி கட்டுக்கோப்பாக பந்துவீசியது. இருப்பினும் தென் ஆப்பிரிக்கா எக்ஸ்டிரா வகையில் 19 ரன்களை விட்டுக்கொடுத்தது நியூசிலாந்து அணிக்கு போனசாக அமைந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்தது. டேரில் மிச்சேல் 16 ரன்களுடனும், சாண்ட்னர் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 181 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பிரிட்டோரியஸ் – ரீசா ஹெண்ட்ரிக்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவர்களில் 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. பிரிட்டோரியஸ் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே ரீசாவும் 37 ரன்களில் அவுட்டானார்.

ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் பின்னர் களமிறங்கிய வீரர்களில் வான் டெர் டசன் (18 ரன்கள்), ஹெர்மன் (11 ரன்கள்) விரைவில் ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடி உருவானது. இருப்பினும் பிரெவிஸ் அதிரடியாக விளையாடி தென் ஆப்பிரிக்க அணிக்கு நம்பிக்கை அளித்தார்.

தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன் தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. உச்சக்கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடைசி ஓவரை மேட் ஹென்றி வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட பிரெவிஸ் வீணடித்தார். அத்துடன் 2-வது பந்தில் பிரெவிஸ் (31 ரன்கள்) அவுட்டானார். இதனால் வெற்றி நியூசிலாந்து பக்கம் திரும்பியது. எஞ்சிய 4 பந்துகளில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட்டை இழந்து 3 ரன் மட்டுமே அடித்தது.

முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றியது. நியூசிலாந்து தரப்பில் கடைசி ஓவரை வீசி வெற்றிக்கு காரணமாக அமைந்த மேட் ஹென்றி 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.