இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 157.1 ஓவர்களில் 669 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இது இந்திய அணியை விட 311 ரன்கள் அதிகமாகும். இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 150 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 311 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியை விட 137 ரன்கள் இந்திய அணி பின் தங்கியுள்ளது. கைவசம் இன்னும் 8 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில், இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியை டிராவில் முடிக்க போராட வேண்டியிருக்கும். அதேவேளையில், இங்கிலாந்து அணியின் கை இந்த டெஸ்ட்டில் ஓங்கியுள்ளது.