லீட்ஸ்,
2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் லீட்சில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா சாம்பியன்ஸ் – ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா சாம்பியன்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் 91 ரன்களுடனும், யூசுப் பதான் 52 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் டேனியல் கிறிஸ்டியன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஷான் மார்ஷ் 11 ரன்களிலும், கிறிஸ் லின் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஆர்சி ஷார்ட் 20 ரன்கள் அடித்த நிலையிலும், பென் டங்க் கோல்டன் டக் அவுட் ஆகியும் ஏமாற்றினர்.
இருப்பினும் காலம் பெர்குசன் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த டேனியல் கிறிஸ்டியன் 39 ரன்களும் (28 ரன்கள்), பென் கட்டிங் 15 ரன்களும் (6 பந்துகள்), அடித்தனர்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காலம் பெர்குசன் 70 ரன்களுடனும் (38 பந்துகள்), ராப் குயினி (16 ரன்களுடனும்) களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் பியூஷ் சாவ்லா 3 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
நடப்பு தொடரில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத இந்திய அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.