Ind vs Eng: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணி 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடி வருகிறது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் இங்கிலாந்து அணி 2 வெற்றிகளை பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தற்போது இத்தொடரின் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் உள்ள மைதானத்தில் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இச்சூழலில் இன்று(ஜூலை 27) இப்போட்டியில் கடைசி நாள் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணியை பொருத்தவரையில் இந்த போட்டி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. ஆனால் 4வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணிக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கிறது. இப்போட்டியில் முதலில் இந்திய அணிதான் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 358 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி அபாரமாக பேட்டிங் செய்து 669 ரன்களை குவித்தது.
இங்கிலாந்து முன்னிலை
அதிகபட்சமாக ஜோ ரூட் 150, அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களையும் எடுத்தனர். இதனால் இந்திய அணி 311 ரன்கள் பின்தங்கிய நிலையில், தற்போது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் எந்த ரன்னும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். பின்னர் கேப்டன் சுப்மன் கில் களமிறங்கி கே.எல். ராகுலுடன் சேர்ந்து ரன்களை குவித்து வருகிறார்.
இருவரும் சேர்ந்து 174 ரன்களை சேர்த்துள்ளனர். சுப்மன் கில் 78, ராகுல் 87 ரன்களையும் அடித்துள்ளனர். இன்னும் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 132 ரன்கள் பின்தங்கி உள்ளனர். இந்த போட்டியை இந்திய அணி டிராவாவது செய்ய வேண்டும் என்றால், குறைந்தபட்சம் இங்கிலாந்து அணியை விட 150 ரன்கள் கூடுதலாக அடிக்க வேண்டும். அதேபோல் இன்றைய போட்டியில் இரண்டாவது ஷேஷன் வரையிலாவது இந்திய அணி பேட்டிங் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்திய அணியால் இப்போட்டியை டிரா செய்ய முடியும்.
ரிஷப் பண்ட் பேட்டிங் செய்வாரா?
இந்த நிலையில், காயத்தால் அவதிப்பட்டு வரும் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வருவாரா? மாட்டாரா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது இது குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கோடாக், ரிஷப் பண்ட் கண்டிப்பாக 5வது நாளில் பேட்டிங் செய்ய வருவார். இந்திய அணி இப்போட்டியை டிரா செய்ய வேண்டும் என்றால், ரிஷப் பண்ட்டின் பேட்டிங் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால் பண்ட் பேட்டிங் செய்ய வருவார் என்று பேட்டிங் பயிற்சியாளர் கோட்டாக் கூறி இருக்கிறார்.