SRH அணியின் முக்கிய ஆல்ரவுண்டரை தட்டி தூக்கும் சிஎஸ்கே? டிரேட் மூலம் வாய்ப்பு!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசனுக்கு முன்பு வீரர்கள் டிரேட் குறித்த விவாதங்கள் தற்போதே சூடுபிடித்துள்ளன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளில் உள்ள வீரர்களை டிரேட் மூலம் வாங்க தயாராக உள்ளன. அந்தவகையில், இளம் ஆல்-ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கழட்டிவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஏலத்தில் இடம் பெறலாம் அல்லது டிரேட் மூலம் பிற அணிகள் வாங்க வாய்ப்புள்ளது. 2023 ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட நிதீஷ்குமார் ரெட்டியை 2025 மெகா ஏலத்திற்கு முன்பு ரூ.6 கோடிக்கு ரீடெய்ன் செய்தது SRH. ஆனால், 2025 சீசனில் அவர் சரியாக ரன்கள் அடிக்கவில்லை. மேலும் சமீபத்திய இங்கிலாந்து தொடரிலும் ரன்கள் அடிக்க சிரமப்படுகிறார். 

மேலும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பும்ரா ஓய்வு பெறுகிறாரா? அதிர்ச்சி தகவல்!

இதனால் அவரை அணி கழட்டிவிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) உள்ளிட்ட அணிகள் அவரை எடுக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. 22 வயதான நிதீஷ் குமார் ரெட்டி, IPL 2024ல் 13 போட்டிகளில் 303 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி இருந்தார். இதன் மூலம் இந்திய அணியிலும் இடம் பிடித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 213 ரன்கள் எடுத்து, மெல்போர்னில் சதம் அடித்தார். ஆனால், IPL 2025ல் 12 போட்டிகளில் 182 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதுவும் SRH அணியின் தோல்விகளுக்கு ஒரு காரணமாக இருந்தது. இதனால், அணி அவரை விடுவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

வெங்கடேஷ் ஐயருக்கு மாற்று?

IPL 2024ல் சாம்பியன் பட்டம் வென்றாலும் ஐபிஎல் 2025ல் தோல்வி அடைந்தது கேகேஆர் அணி. அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் 11 போட்டிகளில் 142 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். இதனால், KKR அணி அவரை விடுவிக்கலாம் என்று கூறப்படுகிறது. நிதீஷ் குமார் ரெட்டி மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்து பந்துவீச்சும் செய்யும் திறன் கொண்டவர். எனவே ஐயருக்கு பதில் நிதீசை எடுக்கலாம் என்று யோசித்து வருகின்றனர்.

விஜய் ஷங்கருக்கு மாற்று?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, IPL 2025ல் மோசமாக விளையாடி புள்ளி பட்டியலில் 10வது இடம் பிடித்தது. இந்த ஆண்டு அணியில் இணைந்த விஜய் ஷங்கர் 6 போட்டிகளில் 118 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். இதனால் சென்னை அணி அவரை கழட்டிவிட்டு நிதீஷ் குமார் ரெட்டியை எடுக்க வாய்ப்புள்ளது. லோயர் ஆர்டரில் ஒரு இந்திய வீரர் இருப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

RTM பயன்படுத்தலாமா?

SRH அணி நிதீஷை விடுவித்தால், IPL மினி ஏலத்தில் ரைட் டு மேட்ச் (RTM) கார்டு பயன்படுத்தி அவரை மீண்டும் வாங்கலாம். ஆனால், அவரது 2025ல் சிறப்பாக விளையாடாததால் புதிய வீரர்களை தேடவும் வாய்ப்புள்ளது. நிதீஷ் குமார் ரெட்டி, இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கையாக கருதப்பட்டார். ஆனால் தற்போது அவரது பேட்டிங் மற்றும் பவுலிங் ஏமாற்றம் அளிக்கிறது.

மேலும் படிங்க: டெஸ்ட்டில் முதன்முறையாக.. பும்ரா செய்த மோசமான சாதனை.. முழு விவரம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.