திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை – மத்திய மந்திரி எல்.முருகன்

புதுடெல்லி,

புதிதாக வெளியாகும் திரைப்படங்கள், உடனுக்குடன் சில இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கூறியதாவது:-

திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்து வெளியிடுவதை திரைப்பட சட்டத்தின் 6ஏஏ மற்றும் 6ஏபி பிரிவுகள் தடை செய்கின்றன. சினிமா திருட்டுக்கு எதிரான சட்டப்பிரிவுகளை வலுப்படுத்துவதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்பட சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

அதன்படி, திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்து இணையதளங்களிலோ, இதர தளங்களிலோ வெளியிட்டால், குறைந்தபட்சம் 3 மாத சிறைத்தண்டனை மற்றும் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும். சிறைத்தண்டனையை 3 ஆண்டுகள் வரையும், அபராதத்தை தணிக்கை செய்யப்பட்ட மொத்த படத்தயாரிப்பு செலவில் 5 சதவீதம் வரையும் நீட்டிக்க முடியும்.

திரைப்பட சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட 7(1பி)(ஐஐ) பிரிவு, திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

சம்பந்தப்பட்ட சினிமாவுக்கு காப்பிரைட் வைத்திருப்பவர்கள் அல்லது அதிகாரபூர்வ நபர்களிடம் இருந்து புகார்களை பெறவும், உரிய உத்தரவு பிறப்பிக்கவும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கும், திரைப்பட தணிக்கை வாரியத்துக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.