ராமேசுவரம்: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து இஸ்ரோ உருவாக்கிய செயற்கைக்கோள் ஜூலை 30-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 10-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேசுவரத்தில் கலாம் நினைவு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் நாராயணண் பேசியதாவது: சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் அளவுக்கு இஸ்ரோ பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 35 கிலோ ராக்கெட்டில் தொடங்கி 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் வல்லமையைப் பெற்றுள்ளது. இது சுமார் 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட் ஆகும்.
புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன சிந்தடிக் அப்பர்சர் ரேடார் செயற்கைக்கோளை (NASA-ISRO Synthetic Aperture Radar) ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இஸ்ரோ ஜூலை 30-ம் தேதி விண்ணில் செலுத்துகிறது. இது ஜிஎஸ்எல்வி எஃப்-16 வரிசையில் 18-வது ராக்கெட்டாகும். இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த செயற்கைக்கோள் நிலநடுக்கம், புயல், பெருமழை உள்ளிட்ட பேரிடர்கள் குறித்து துல்லியமான தகவல்களைப் பகிரும்.
இஸ்ரோ நடப்பாண்டு 12 ராக்கெட்களை விண்ணில் ஏவ உள்ளது. ரோபோவுடன் கூடிய ககன்யான் ஜி-1 ஆளில்லா செயற்கைக்கோளை டிசம்பரில் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இந்திய விண்வெளி வீரரை ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் ஆராய்ச்சிகளை இஸ்ரோ முடித்துள்ளது. அப்துல் கலாம் கூறியதுபோல இந்தியா தனது 100-வது சுதந்திர ஆண்டில் (2047-ல்) வல்லரசாக மாறும். அப்போது விண்வெளியில் இஸ்ரோ உதாரணச் சான்றாக மாறும். இவ்வாறு நாராயணன் கூறினார்.
முன்னதாக, இஸ்ரோ குறித்த ஆவணப் படம் திரையிடப்பட்டது. மேலும், மாணவர்கள் தயாரித்த பிஎஸ்எல்வி மற்றும் சந்திரயான் போன்ற ராக்கெட் மாதிரிகளை நாராயணன் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், உயிரியல் விஞ்ஞானி சுல்தான் அஹமது இஸ்மாயில், மருத்துவர் ஜோசப் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.