"உடலுக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது" – சார்ஜாவில் பிரபலமாகும் 'மணல் குளியல்'

சார்ஜா,

மணல் குளியல் என்பது உடலை மணலில் புதைத்து சிகிச்சை பெறும் ஒரு பழமையான இயற்கை சிகிச்சை முறையாகும். இது ஆங்கிலத்தில் ‘சேண்ட் பாத்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் உடலை சூடான மணலில் புதைத்து அதன் வெப்பம் மூலம் உடலின் பல்வேறு நோய்களை நிவர்த்தி செய்யலாம் என்ற நம்பிக்கை உள்ளது. பழங்காலம் முதலே இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறை நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, மொராக்கோ, ஜப்பான் போன்ற நாடுகளில் மரபு சிகிச்சையாக பயன்படுத்தப்படும் இந்த மணல் குளியல் தற்போது அமீரகத்தில் சார்ஜா கடற்கரைகளில் பிரபலமடைந்து வருகிறது.

சார்ஜா கடற்கரையில் சூரிய உதயத்திற்கு முன், விடியற்காலை நேரத்தில் குழுவாக இந்த மணல் குளியலை பலரும் மேற்கொள்கின்றனர். முதலில் ஆழமற்ற குழிகள் கடற்கரை மணலில் தோண்டப்படுகிறது. பிறகு நண்பர்கள் உதவியுடன் அந்த குழியில் படுத்து பிறகு மணலால் உடல் கழுத்து வரை மூடப்படுகிறது.

அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஈரமான மணலில் சுமார் 25 நிமிடங்கள் புதைந்திருக்கின்றனர்.

இதில் கோவாவில் இருந்து வந்துள்ள குழுவினர் மணல் குளியல் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

பிரபலமடைந்து வரும் மணல் குளியல் குறித்து அமீரகத்தில் பணியாற்றும் டாக்டர்கள் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ரத்த சுழற்சி மேம்படுவது, தசைபிடிப்பில் இருந்து நிவாரணம், சருமத்திற்கான நன்மைகள் இதில் கிடைப்பது உண்மை என்றாலும் அமீரகத்தில் நிலவும் உச்சகட்டமான கோடை காலத்தில் அதிகமான வெப்பம் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும். உடலில் நீரிழப்பு மற்றும் வெப்ப வாதம் போன்றவைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மணல் குளியலுக்கான நேரத்தை நிர்ணயிக்க வேண்டும்.

மேலும் இதில் பங்கேற்பவர்கள் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். புதைந்திருக்கும் மணல் சுத்தமாக இருக்க வேண்டும். மாசுபாடுடைய மணல் பகுதிகள் பாக்டீரியா மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் தன்மையை கொண்டு இருக்கலாம். எனவே குழந்தைகள், முதியவர்கள் இதில் மிக கவனமாக பங்கேற்க வேண்டும். நாள்பட்ட சுவாசக்கோளாறு மற்றும் தோல் நோய் பிரச்சினை உடையவர்கள் ஒரு மருத்துவ நிபுணரை முன்கூட்டியே சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.