மதுரை: சொத்துவரி விவகாரத்தில் பதவி விலகக் கோரி மேயரை முற்றுகையிட்ட அதிமுக கவுன்சிலர்கள்

மதுரை; சொத்துவரி விவகாரத்தில் மேயர் இந்திராணி பதவி விலகக்கோரி, மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து அவரை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினமா செய்த பிறகு முதல் முறையாக மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். பதவி விலகிய முன்னாள் மண்டலத் தலைவர்கள் வாசுகி, சரவண புவனேஷ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சர்மா, சுவிதா ஆகியோர் மாமன்ற கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தனர்.

அவர்களுக்கு பின்வரிசையில் கவுன்சிலர்களுக்கான இடத்தில் ‘சீட்’ ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அமர்ந்த முன் வரிசையில் குழுத் தலைவர்கள் 2 பேருக்கும், மற்ற கவுன்சிலர்களுக்கும் ‘சீட்’ ஒதுக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் சோலைராஜா தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள், மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டை கண்டித்து, கூட்டத்திற்கு கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.

மேயர் தீர்மானங்களை வாசிக்கத் தொடங்கியதும், மாநகராட்சி அதிமுக எதிர்கட்சித்தலைவர் சோலைராஜா மற்றும் அக்கட்சி கவுன்சிலர்கள் எழுந்து, ‘“சொத்துவரி முறைகேடுக்கு பொறுப்பேற்றும், விசாரணை நியாயமாக நடப்பதற்கும் மேயர் இந்திராணி பதவி விலக வேண்டும்.” என்று கூறி கோஷமிட்டனர்.

தொடர்ந்து சோலைராஜா பேசுகையில், “சொத்துவரி முறைகேடுக்கு மூளையாக இருந்த ரவி, மேயரின் நேர்முக உதவியாளராக இருந்த பொன்மேணியின் கணவர். அதனால், மேயரையும் இந்த விவகாரத்தில் விசாரிக்க வேண்டும்,” என்றார். அதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, “உங்கள் ஆட்சியில்தான் மாநகராட்சியில் அதிகம் முறைகேடு நடந்துள்ளது, உங்கள் முன்னாள் அமைச்சரையும், முன்னாள் மேயரையும் விசாரிக்க வேண்டும்.” என எதிர்ப்பு கோஷமிட்டனர்.

தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள், மேயரை நோக்கிச் சென்றனர். அவர்களை திமுக கவுன்சிலர்கள் தடுத்து வாக்குவாதம் செய்ததால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேயர் இந்திராணி, “இந்த மாமன்றம் அரசியல் செய்வதற்கான இடமில்லை. உங்கள் அரசியலை வெளியே போய் வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் பிரச்சினைகளை பேசுவதாக இருந்தால் மட்டும் இருங்கள், இல்லையென்றால் வெளியே செல்லுங்கள்.” என்று கூறி சபை காவலர்களையும், போலீஸாரையும் அழைத்து அவர்களை வெளியே அனுப்பும்படி உத்தரவிட்டார்.

போலீஸார் உள்ளே வந்ததுக்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும், திமுக கவுன்சிலர்கள் பதிலுக்கு கோஷமிடவும் மாநகராட்சி கூட்டத்தில் சிறிது நேரம் பெரும் கூச்சலும், குழப்பமும் நீடித்தது.

அப்போது மேயர் இந்திராணி, “சொத்துவரி குறைப்பு குற்றச்சாட்டு வந்தவுடனேயே எங்கள் முதல்வர் நடவடிக்கை எடுத்து நியாயமான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உங்கள் ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டில் திருடுபோன ரூ.200 கோடியை பற்றிச் சொல்லுங்கள். அதை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும். அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்.” என்றார்.

மேயரிடமும் சிறிதுநேரம் வாக்குவாதம் செய்த அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றனர். அதற்கு மேயர் இந்திராணி, “ரொம்ப நன்றி, போய் வாருங்கள்.” என்றார்.

திமுக கவுன்சிலர் ஜெயராஜ் இது குறித்து, “சொத்துவரி முறைகேடு குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், குற்றச்சாட்டு இல்லை என்பதை நிரூபித்துவிட்டு வாங்கள் என்று மண்டலத் தலைவர்களை முதல்வர் பதவி விலகச் சொல்லிவிட்டார். தற்போது ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்புக் குழு விசாரிக்கிறது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வீட்டில் ரூ.200 கோடி திருடு போனது உண்மையென்றால், சொத்துவரி முறைகேடும் உண்மை. அது பொய்யென்றால் இதுவும் பொய்தான்.” என்றார்.

காங்கிரஸ் கவுன்சிலர் கார்த்திகேயன், “மாமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேச வந்தால் அதற்குள் ஏதோதோ மனதிற்கு சங்கடமாக நடந்துவிட்டது. மாநகராட்சி வளாகத்திலேயே உள்ள சுற்றுச்சூழல் பூங்கா சரியான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. தன்னார்வலர்கள் வைத்த செடிகள், கருகிக் கிடக்கிறது. மாநகராட்சி வளாகத்திலேயே இந்த நிலைமை என்றால் மற்ற பூங்காக்களைப் பற்றி சொல்லவேண்டியதில்லை.” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.