புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதற்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் திருப்திப்படுத்தும் அரசியல்தான் காரணம் என்று மாநிலங்களவையில் ஜெய்சங்கர் கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், இந்த குற்றச்சாட்டு கொடூரமானது என கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு காலத்தில் வெளியுறவு அமைச்சர் தொழில்முறை நிபுணராக அறியப்பட்டார். ஆனால், தற்போது அதற்கான அறிகுறியைக்கூட கைவிட்டுவிட்டதை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
நேரு குறித்தும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்தும் மாநிலங்களவையில் இன்று அவர் பேசிய கருத்துக்கள் முற்றிலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தன.
கிழக்குப் பகுதியிலுள்ள சட்லஜ், பியாஸ், ராவி ஆகிய 3 நதிகள் இந்தியாவுடன் இல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று அவர் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், அதைக்கூட அவர் வேண்டுமென்றே தவிர்த்துள்ளார்.
அந்த 3 நதிகள் இந்தியா வசம் இல்லாமல் இருந்திருந்தால், பசுமை புரட்சிக்கு வித்திட்ட பக்ரா நங்கல் அணை, சாத்தியமாகி இருக்காது, மாற்றத்துக்கு வழிவகுத்த நீண்ட ராஜஸ்தான் கால்வாய் சாத்தியமாகி இருக்காது, ராவி – பியாஸ் இணைப்பு சாத்தியமாகி இருக்காது.
செனாப், ஜீலம்(பாகிஸ்தானுக்குள் செல்லும் நதிகள்) நதிகளில்கூட இந்தியா ஏற்கனவே பாக்லிஹார், சலால், துல் ஹஸ்தி, உரி, கிஷெகங்கா போன்ற பல நீர்வழித் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. இன்னும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜூன் 2011ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்முயற்சியால், செனாப் பள்ளத்தாக்கு மின் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தியாவுக்கு சட்டப்பூர்வ உரிமையுள்ள செனாப் மற்றும் ஜீலம் நதிகளில் உள்ள நீரை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது என்பது உண்மைதான். ஆனால், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதற்கு, நாட்டின் முதல் பிரதமர் மேற்கொண்ட திருப்திப்படுத்தும் அரசியல்தான் காரணம் என்று மாநிலங்களவையில் ஜெய்சங்கர் கூறி இருப்பது உண்மையில் கொடூரமானது” என தெரிவித்துள்ளார்.