லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி விளையாட உள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அந்த வரிசையில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணியில் இடது கை பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த போட்டியிலே (4-வது டெஸ்ட்) அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசி நேரத்தில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இந்நிலையில் இந்த 5-வது போட்டியில் அவர் விளையாடுவது ஏறக்குறைய உறுதி ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. பல முன்னாள் வீரர்களும் தொடரின் ஆரம்பத்திலிருந்தே அர்ஷ்தீப் சிங் களமிறங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார? என்பது கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில் இந்த தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்பட்டது.அதன்படி அவர் ஏற்கனவே 3 போட்டிகளில் (1, 3 மற்றும் 4) விளையாடி விட்டார். இதன் காரணமாக அவர் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற அவர் களமிறங்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் அவரை ஒய்வு எடுக்க அறிவுறுத்தியதாகவும், இதனால் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாளியுள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது