திருவனந்தபுரம்: சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதற்கு, கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை வரவேற்பு தெரிவித்துள்ளன.
கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் உட்பட 3 பேர், ஆட்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கடந்த ஜூலை 25-ம் தேதி சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டனர். சத்தீஸ்கரின் நாராயண்பூரைச் சேர்ந்த 3 சிறுமிகளை கட்டாய மதமாற்றம் செய்து கடத்தியதாக உள்ளூர் பஜ்ரங் தள நிர்வாகி அளித்த புகாரின் பேரில் மூவரும் கைது செய்யப்பட்டனர். இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
சிபிஎம் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் கடும் கண்டனம் தெரிவித்தன. கேரள மாநில பாஜகவும் இந்த கைது குறித்த அதிருப்தி தெரிவித்தது. கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றம், கன்னியாஸ்திரிகள் ப்ரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் மற்றும் சுகமன் மாண்டவி ஆகிய மூவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மூவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள கல்வி அமைச்சர் சிவன் குட்டி, “கன்னியாஸ்திரிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருப்பது மனதை தொடுகிறது. அதேநேரத்தில், அவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பின்னால் உள்ள அரசியல் நிகழ்ச்சி நிரல் மிகவும் தெளிவாக உள்ளது.
கேரளாவில் உள்ள பாஜக, கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்தது. அதேநேரத்தில், சத்தீஸ்கர் மாநில பாஜக அரசு, ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது அக்கட்சியின் இரட்டை முகத்தை வெளிப்படுத்துகிறது” என குற்றம் சாட்டினார்.
கன்னியாஸ்திரிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டதற்கு கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள பாஜகவால், பஜ்ரங்க தளத்தையோ, சத்தீஸ்கர் மாநில அரசையோ கட்டுப்படுத்த முடியவில்லை என விமர்சித்தார்.
இந்திய கத்தோலிக்க பிஷப்ஸ் மாநாட்டின் தலைவரும் திருச்சூர் பேராயருமான ஆண்ட்ரூஸ் தாழத், கன்னியாஸ்திரிகள் விடுவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர்கள் பொய்யான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்த அவர், அவர்கள் மீதான வழக்கை மாநில அரசு விரைவாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.