பாகிஸ்தான் பயங்கராத முகாம்களை இந்தியா அழித்ததை காங்கிரஸால் ஜீரணிக்க முடியவில்லை: பிரதமர் மோடி

வாரணாசி: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்ததை காங்கிரஸ் கட்சியாலும், அதன் ஆதரவாளர்களாலும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

பிஎம் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 9.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி நிதி உதவியை விடுவிக்கும் நிகழ்ச்சி உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பேசியது, “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு நான் வாராணசி வருவது இதுவே முதல்முறை.

பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் இரக்கமின்றி கொல்லப்பட்டபோது எனது இதயம் சோகத்தால் நிறைந்தது. எனது மகள்களின் குங்கும் அழிக்கப்பட்டதற்கு பழிவாங்க நான் சபதம் மேற்கொண்டேன். அந்த சபதம் சிவபெருமானின் ஆசியுடன் நிறைவேறி உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை சிவபெருமானின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

விவசாயிகளின் நலனுக்காக எங்கள் அரசு அயராது பாடுபட்டு வருகிறது. முந்தைய அரசுகள் வாக்குறுதி அளித்த ஒரு திட்டத்தைக்கூட நிறைவேற்றவில்லை. ஆனால், பாஜக அரசு தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. பிஎம் கிசான் சம்மான் திட்டம், பாஜக அரசின் விருப்பம் மற்றும் நோக்கங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற வளர்ச்சிக்கு எதிரான கட்சிகள், மக்களை எல்லா விதத்திலும் தவறாக வழிநடத்த முயல்கின்றன. நம்பிக்கையற்ற எதிர்க்கட்சிகள் இத்தகைய பொய்யான நம்பிக்கைகளால்தான் வாழ்கின்றன என்பது துரதிருஷ்டம்.

பிஎம் கிசான் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை விவசாய பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.3.75 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

அநீதியும் பயங்கரவாதமும் நிகழும்போது சிவபெருமான் ருத்ர ரூபத்தை எடுக்கிறார். ஆபரேஷன் சிந்தூரின்போது உலகம் இந்தியாவின் ருத்ர முகத்தைக் கண்டது. துரதிருஷ்டவசமாக ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி சிலருக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்ததை காங்கிரஸ் கட்சி, அதன் ஆதரவாளர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

பாகிஸ்தான் ஆழ்ந்த வேதனையில் உள்ளது என்பது அனைவருக்கும் புரிகிறது. ஆனால், பாகிஸ்தான் அனுபவிக்கும் வேதனையை இங்குள்ள காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நமது படைகளின் வீரத்தை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் ஒரு வேடிக்கை என காங்கிரஸ் கூறுகிறது” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.