லண்டன்,
இ.சி.எஸ். 10 ஓவர் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் லண்டன் கவுண்டி – கில்ட்போர்ட் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த லண்டன் கவுண்டி அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 226 ரன்கள் குவித்தது. 28 பந்துகளில் சதத்தை எட்டிய லண்டன் கவுண்டி அணி வீரர் உஸ்மான் கானி (ஆப்கானிஸ்தான்) 11 பவுண்டரி 17 சிக்சர்களுடன் 153 ரன்கள் குவித்து அசத்தினார்.
முன்னதாக அவர் வில் ஜர்னி வீசிய ஒரே ஓவரில் (8-வது ஓவர்) 45 ரன்கள் திரட்டி புதிய சாதனை படைத்தார். ஒரு வைடு, 2 நோ பால் உள்பட 5 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் இந்த ரன் வந்தது. இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 43 ரன்கள் எடுத்ததே ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் அதிகபட்சமாக இருந்தது. தற்போது கெய்க்வாட்டின் சாதனையை தகர்த்து உஸ்மான் கானி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
உஸ்மான் கானி ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்த விதம்:
* 5 சிக்சர்கள் (30 ரன்கள்)
* 3 பவுண்டரிகள் (12 ரன்கள்)
* 2 நோபால்கள் ( 2 ரன்)
* ஒரு வைடு (ஒரு ரன்)
பின்னர் ஆடிய கில்ட்போர்ட் அணியால் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் லண்டன் கவுண்டி அணி 71 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.