தூத்துக்குடி: சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கு.செல்வப்பெருந்தகை கூறினார். நெல்லையில் கொல்லப்பட்ட ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் வீடு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் உள்ளது. இங்கு வந்த செல்வப்பெருந்தகை கவின் செல்வகணேஷின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கல்வியில் சிறந்து விளங்கிய இளைஞரை படுகொலை செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவேதான் சாதிய வன்கொடுமை படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில் சட்டப்பேரவையைக் கூட்டி இந்த சட்டத்தை இயற்ற வேண்டும்.
கவின் குடும்பத்துக்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவரது தம்பிக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தை மிரட்டிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க வேண்டும். சிபிசிஐடி விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.