லண்டன்,
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி ஹாரி புரூக் (111 ரன்), ஜோ ரூட் (105 ரன்) ஆகியோரது சதங்களால் வெற்றியை நோக்கி பயணித்தது. இருப்பினும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக பந்துவீசி வெற்றியை இந்தியா பக்கம் திருப்பினர்.
இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் குறைந்த ரன் வித்தியாச வெற்றியாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 13 ரன் வித்தியாசத்தில் வென்றதே குறைந்தபட்சமாக இருந்தது.
அந்த பட்டியல்:
1. 6 ரன்கள் – எதிரணி இங்கிலாந்து
2. 13 ரன்கள் – எதிரணி ஆஸ்திரேலியா
3. 28 ரன்கள் – எதிரணி இங்கிலாந்து
4.31 – எதிரணி ஆஸ்திரேலியா