India National Cricket Team: இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிவிட்டது. அடுத்து செப்டம்பரில் துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் இந்திய அணிக்கு எந்த சர்வதேச போட்டிகளும் கிடையாது.
Team India: இந்திய அணியின் அடுத்தடுத்த போட்டிகள்
உள்நாட்டில் நடக்கும் சில டி20 லீக் தொடர்கள், இம்மாத இறுதியில் தொடங்கும் துலீப் டிராபி தொடர் ஆகியவற்றில் சில நட்சத்திர வீரர்கள் விளையாடுவார்கள் எனலாம். ஆசிய கோப்பை தொடருக்கு பின்னர்தான் இந்திய அணி இருதரப்பு தொடர்களை விளையாட உள்ளன. சொந்த மண்ணில் அக்டோபர் மாதம் மேற்கு இந்திய தீவுகளுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. அடுத்து அக்டோபர் – நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஓடிஐ மற்றும் 5 டி20ஐ போட்டிகளை விளையாட உள்ளன. நவம்பர், டிசம்பரில் உள்நாட்டில் தென்னாப்பிரிக்கா அணியுடன் 2 டெஸ்ட், 3 ஓடிஐ, 3 டி20ஐ போட்டிகளில் இந்தியா விளையாட இருக்கிறது.
Team India: இந்த வீரர்களுக்கு வாய்ப்பில்லை
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஓடிஐ தொடர்களில் மட்டும் விளையாடுவார்கள் என தெரிகிறது. ஜஸ்பிரித் பும்ரா பெரும்பாலும் அடுத்து மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் களமிறங்குவார். மேலும் ஆசிய கோப்பை தொடரும் டி20 வடிவில் நடைபெற இருப்பதால் அதன் ஸ்குவாட் அறிவிப்பின் மீது தற்போது எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. ரிஷப் பண்ட் காயத்தில் சிக்கியிருப்பதால் அவருக்கு பதில் விக்கெட் கீப்பிங்கில் விளையாடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சஞ்சு சாம்சன் நிச்சயம் அணியில் இருப்பார். கேஎல் ராகுல், துருவ் ஜூரேல் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வியும் பலருக்கும் இருக்கிறது.
Shreyas Iyer: ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் வரார்
இது ஒருபுறம் இருக்க, ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய டி20 மற்றும் டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்த ஷ்ரேயாஸ் ஐயரை மீண்டும் டி20 அணிக்குள் கொண்டுவர பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாகவும், வரும் ஆசிய கோப்பை தொடரிலேயே அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் லீக் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது, அத்தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் மெதுவான மற்றும் சுழலுக்கு சாதகமாக ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி உள்நாட்டில் நடைபெறும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்களிலும் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
Shreyas Iyer: இரண்டு முக்கிய காரணங்கள்
இந்நிலையில், தற்போது பிசிசிஐ வட்டாரத்தில் ஒருவர் ஊடகத்திடம் கூறுகையில், “ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் தரம் மற்றும் அவர் வைத்திருக்கும் மிடில் ஆர்டர் அனுபவம் இந்திய அணிக்கு அனைத்து வடிவங்களிலும் தேவை. ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபியின் போது இங்கிலாந்தில் நாம் தவறவிட்ட ஒன்று இதுதான். ஷ்ரேயாஸ் ஐயர் சுழற்பந்துவீச்சுக்கு எதிரான சிறந்த வீரர் என்பது தேர்வாளர்கள் அறிவார்கள். இந்த திறன் சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும்” என்றார்.
எனவே, ஷ்ரேயாஸ் ஐயரை ஆசிய கோப்பை தொடரிலும், அடுத்தடுத்த உள்நாட்டு டெஸ்ட் தொடர்களிலும் நாம் காணலாம் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
மேலும் படிக்க | ஆசிய கோப்பை 2025: இந்தியாவின் போட்டி அட்டவணை, நேரம் மற்றும் நேரலை விவரங்கள்
மேலும் படிக்க | இந்திய அணி அடுத்து விளையாடப்போகும் போட்டிகளின் தேதி – முழு விவரம்..!!
மேலும் படிக்க | விராட், ரோஹித் 2027 உலகக் கோப்பை வரை விளையாடுவார்களா…? வெளியான முக்கிய தகவல்