நைபியிடவ்,
மகளிருக்கான (20 வயதுக்குட்பட்ட) ஆசிய கோப்பை (தாய்லாந்து), உலக கோப்பை (போலந்து) கால்பந்து தொடர்கள் அடுத்த ஆண்டு நடக்க உள்ளன. இதற்கான தகுதிச்சுற்று மியான்மரில் நடக்கிறது. மொத்தம் 33 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய மகளிர் அணி ‘டி’ பிரிவில், மியான்மர், இந்தோனேஷியா, துர்க்மெனிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது.
இதில், இந்தியா-இந்தோனேஷியா மோதிய முதல் போட்டி ‘டிரா’ (0-0) ஆனது. நேற்று தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி, துர்க்மெனிஸ்தானை சந்தித்தது. போட்டியின் 7வது நிமிடத்தில் இந்தியாவுக்கு ‘கார்னர் கிக்’ கிடைத்தது. சுலஞ்சனா அடித்த இந்த பந்தை, கேப்டன் சுபாங்கி, தலையால் முட்டி கோலாக மாற்றினார்.
14வது நிமிடத்தில் இந்தியாவின் நேஹா, பந்தை துர்க்மெனிஸ்தான் கோல் ஏரியாவுக்குள் கொண்டு சென்றார். மின்னல் வேகத்தில் அங்கு வந்த சிபானி தேவி, எதிரணி கோல் கீப்பரை ஏமாற்றி, பந்தை வலைக்குள் தள்ளினார். இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
35வது நிமிடம் கிடைத்த மற்றொரு ‘கார்னர் கிக்’ வாய்ப்பில் சுலஞ்சனா பந்தை அடித்தார். இதில், தோய்பிசனா சானு, தலையால் முட்டி கோல் அடித்தார். மீண்டும் அசத்திய சுலஞ்சனா (37வது நிமிடம்), சுபாங்கி (40 வது நிமிடம்) கோல் அடித்தனர். முதல் பாதியில் இந்தியா 5-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் பூஜா (64வது நிமிடம்), சுலஞ்சனா (90வது நிமிடம்) கோல் அடித்தனர். முடிவில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் இந்தியா (4) முதல் இடத்துக்கு முன்னேறியது. கடைசி போட்டியில் நாளை மியான்மரை சந்திக்கிறது. இதில் வென்றால் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறலாம்.