Chinnaswamy stadium closed soon: நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது. ஐபிஎல் கோப்பையை வெல்வது பெங்களூரு அணியின் 18 வருட கனவு என்பதால், இதனை விமர்சையாக கொண்டாட நினைத்து பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சியை ஏற்படுத்தினர். ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் சரியான திட்டமிடல் இல்லாததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், 11 அப்பாவி ரசிகர்கள் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையிலான ஆணையம், 17 ஏக்கரில் 32000 இருக்கைகளுடன் அமைந்துள்ள சின்னசாமி ஸ்டேடியம் பெரிய நிகழ்வுகளை நடத்த தகுதியற்றது என்ற அறிக்கையை அளித்தது. மேலும், அதிக மக்கள் கூடும் போட்டிகளை நிர்வகிக்கும் வசதிகள் சின்னசாமி மைதானத்திற்கு கிடையாது என்றும், எனவே பெரிய மைதானங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் அந்த அணையம் பரிந்துரைத்தது. இந்த நிலையில் தான், கர்நாடக அரசு அதிரடியான முடிவை எடுத்துள்ளது.
பெங்களூருவில் புதிய மைதானம்
முதலில், நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையிலான ஆணையம் போட்டிகளை பெரிய மைதானங்களுக்கு மாற்ற பரிந்துரைத்தபோது, கர்நாடக உள்ளூர் 2025 மகாராஜா தொடரை மைசூருக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் மற்றும் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த சூழலில், பெங்களூருவில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்க கர்நாடக அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்த புதிய மைதானம் பெங்களூருவின் பொம்மசந்திராவில் அமைக்கப்பட உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ. 1650 கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 80000 இருக்கைகளுடனும் எட்டு உட்புற மற்றும் எட்டு வெளிப்புற விளையாட்டு அரங்குகள், ஒலிம்பிக் தரத்தில் நீச்சல் குளங்கள், விடுதிகள், ஹோட்டல்கள், விருத்தினர் மாளிகைகள், அதிநவீன உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் சர்வதேச நிகழ்வுகளை நடத்துவதற்கான மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மூடப்படும் சின்னசாமி ஸ்டேடியம்
இதன் மூலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திற்கு அடுத்தப்படியாக அதாவது இந்தியாவின் 2வது பெரிய கிரிக்கெட் மைதானமாக இந்த மைதானம் மாறவுள்ளது. அதேசமயம், இந்தியாவில் ஒரு முக்கிய மைதானமாக இருக்கும் சின்னசாமி மைதானம் விரைவில் மூடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.