சென்னை: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சதுரங்க விளையாட்டுபோல் காய் நகர்த்தியதாகக் கூறியுள்ளார் ராணுவத் தளபதி உபேந்திரா துவிவேதி.
சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராணுவத் தளபதி உபேந்திரா துவிவேதி, “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சதுரங்க விளையாட்டுபோல் நடத்தினோம். அதில் எதிரியின் அடுத்த நகர்வு என்னவென்பது தெரியாது அல்லவா?. அதுபோலவே பாகிஸ்தான் அடுத்து என்ன செய்யும் என்று எங்களுக்குத் தெரியாது. நமது நகர்வுகள் அவர்களுக்குத் தெரியாது. இதை ‘க்ரே ஜோன்’ என்போம். க்ரே ஜோனில், வழக்கமான போர் நடவடிக்கைகள் இருக்காது. இந்தச் சூழலில் ஒரு செஸ் விளையாட்டைப் போலத்தான் களமாடினோம்.
சில நேரங்களில் நாம் அவர்களை ‘செக்மேட்’ செய்தோம். சில நேரங்களில் நமது வீரர்களை இழந்தோம். வாழ்க்கை முழுமையுமே அப்படியானதுதானே.
ஆனால், பாகிஸ்தான் இந்த மோதலில் தானே வெற்றி பெற்றதுபோல் சித்தரிப்பு செய்வதில் சிறந்து விளக்குகிறது. அந்நாட்டு ராணுவத் தளபதி அசிம் முனீர் ஃபீல்டு மார்ஷல் பதவி பெற்றுள்ளார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் நீங்கள் ஆபரேஷன் சிந்தூரில் யார் வென்றது என்று கேட்டால், “அசிம் முனீர் ஃபீல்டு மார்ஷல் ஆகிவிட்டார். அப்படியென்றால் நாங்கள் தான் வென்றிருக்க வேண்டும் என்பார்கள். அவ்வாறாக அவர்கள் நம்பவைக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் அமைவிடங்களை இந்தியா அழித்தது. தொடர்ந்து பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியையும் இந்திய முறியடித்தது. பின்னர் இருதரப்புக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.