ஜம்மு,
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அகால் குல்சன் வன பகுதிகளில், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த புலனாய்வு தகவலை தொடர்ந்து அவர்களை தேடும் தீவிர பணியில் ராணுவம் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
ஆபரேஷன் அகால் என்ற பெயரிலான இந்த ராணுவ நடவடிக்கை பணியானது, கடந்த 9 நாட்களுக்கு முன்பு ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கியது. அப்போது, ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.
சமீப ஆண்டுகளில் மிக நீண்டகால ராணுவ தேடுதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், குல்காம் மாவட்டத்தில் அகால் வன பகுதிகளில், பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் நேற்றிரவு வீரமரணம் அடைந்தனர்.
அவர்கள் பிரீத்பால் சிங் மற்றும் ஹர்மிந்தர் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதுதவிர, 2 வீரர்கள் காயமடைந்தனர். வீரர்களுடைய மறைவுக்கு இந்திய ராணுவம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களுடைய தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை எப்போதும் எங்களுக்கு உந்துதலாக இருக்கும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், 10-வது நாளாக இன்றும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது. குல்காம் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இதுபோன்ற ராணுவ நடவடிக்கைகளில் நடப்பு ஆண்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3 வீரர்கள், ஜம்மு பிரிவில் 13 வீரர்கள் என 16 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.