சீதாமரி: வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நேருதான் தொடங்கினார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் பிஹாரின் சீதாமரி நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
வாக்கு வங்கி அரசியலை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி முதல்முறையாக மேற்கொள்ளப்படவில்லை. உங்களது தாத்தா நேருதான் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை முதல்முறையாக மேற்கொண்டார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைவது உறுதி. இதன்காரணமாக இப்போதே ராகுல் காந்தி உள்ளிட்டோர் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் சார்பில் அண்மையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பிலோ, ராஷ்டிரிய ஜனதா தளம் தரப்பிலோ இதுவரை ஆட்சேபம் எழுப்பப்படவில்லை. இந்திய மண்ணில் பிறந்தவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும்.
லாலுவும் அவரது ஆதரவாளர்களும் ஊடுருவல்காரர்களின் வாக்குகளை விரும்புகின்றனர். இதன் காரணமாகவே வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வாக்காளர் பட்டியலில் இருந்து ஊடுருவல்காரர்கள் நீக்கப்படுவார்கள். பிரதமர் மோடியின் ஆட்சியில் தீவிரவாதிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படுகிறது.
பிஹாரில் மிக நீண்ட காலம் லாலு பிரசாத் ஆட்சி நடத்தினார். அப்போது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், ரவுடிகளின் ஆதிக்கம் நிறைந்திருந்தது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மேம்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த பிஹாரும் வளர்ச்சிப் பாதையில் பயணம் செய்கிறது. பிஹாரின் சீதாமரியில் ஜானகி தேவிக்கு பிரம்மாண்ட கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. 67 ஏக்கர் பரப்பில் ரூ.900 கோடியில் இந்த கோயில் கட்டப்படும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.