பெங்களூரு: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக அமைச்சர் கே.என்.ராஜண்ணா, வாக்கு திருட்டு குறித்து தனது கட்சி மீதே விமர்சனம் வைத்ததை அடுத்து மேலிட உத்தரவுக்கு இணங்க அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்துள்ளார்.
கர்நாடகாவின் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.ராஜண்ணா. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவர். கடந்த 7-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, பெங்களருவின் மகாதேவபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகவும், அந்த தொகுதியின் வாக்காளர் பட்டியல் முறைகேடான முறையில் தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் கே.என்.ராஜண்ணா, “வாக்காளர் பட்டியல் எப்போது தயாரிக்கப்பட்டது? நமது சொந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோதுதான் அது தயாரிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அனைவரும் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தார்களா? நாம் சாதாரணமாகப் பேசினால், பல விஷயங்களைச் சொல்ல வேண்டி இருக்கும்.
முறைகேடுகள் நடந்தன என்பது உண்மைதான். அதில் எந்த பொய்யும் இல்லை. ஆனால், இந்த முறைகேடுகள் நம் கண் முன்னேதான் நடந்தன. இதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். அப்போது நாம் கவனிக்கவில்லை. இனிமேலாவது, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் போன்ற விவகாரங்களில் சரியான நேரத்தில் செயல்படுவது தலைவர்களின் பொறுப்பு. வரைவு வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்படும்போது நாம் நமது ஆட்சேபனைகளைத் தெரிவிக்க வேண்டும். அது நமது பொறுப்பு” என கூறி இருந்தார்.
கே.என்.ராஜண்ணாவின் இந்தப் பேச்சு, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மேலிட உத்தரவுக்கு இணங்க கே.என்.ராஜண்ணா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்த ராஜண்ணா, தனது தரப்பு விளக்கத்தை அளித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ராஜண்ணாவின் ராஜினாமாவை அடுத்து பாஜக, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்துப் பேசிய பாஜக மூத்த தலைவர் சி.டி.ரவி, “காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை. உண்மையை யாராவது கூறினால் அவர்களை ராஜினாமா செய்யச் சொல்கிறது காங்கிரஸ்” என தெரிவித்தார்.