நாக்பூர்,
மராட்டியத்தின் நாக்பூர் நகரில் சாந்தி நகர் பகுதியில் குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. இந்நிலையில், அந்த குடும்பத்தின் வயது முதிர்ந்த தந்தையை மகன் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
அந்த தந்தை சோபா மீது அமர்ந்து இருக்கிறார். அப்போது, அவருடைய மகன் திரும்ப திரும்ப அவருடைய கன்னத்தில் அறைகிறார். முடியை பிடித்து இழுக்கிறார். கழுத்து பகுதியையும் பிடித்து இழுக்கிறார். தந்தையின் அருகே அமர்ந்திருந்த தாய், இவை எல்லாவற்றையும் அமைதியாக கவனித்தபடி இருக்கிறார்.
இந்த சம்பவம் பற்றி முறைப்படி புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. எனினும், வீடியோ வைரலாக பரவியதும் போலீசார் விசாரணை மேற்கொண்டு சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்றுள்ளனர்.
ஆனால், மகனை விட்டு கொடுக்காமல் பேசிய அந்த தந்தை, அப்படி ஒரு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என போலீசாரிடம் கூறி மகனை காப்பாற்றி உள்ளார். புகார் அளிக்கவும் மறுத்து விட்டார்.
அப்போது, அந்த தாய், இது எங்களுடைய குடும்ப விவகாரம் என்று கூறியதுடன், எதற்காக வந்தீர்கள் என போலீசாரை திருப்பி கேட்டிருக்கிறார். இதனால், போலீசார் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், அந்த மகனை கடுமையாக எச்சரித்ததுடன், ஆலோசனையும் வழங்கினர். பெற்றோருக்கு எதிரான வன்முறையை சகித்து கொள்ள முடியாது என்றும் கூறி விட்டு சென்றனர்.