புதுடெல்லி,
புதுடெல்லியில், இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு நாடாளுமன்ற மேலவைக்கான எதிர்க்கட்சி தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே இன்று இரவு விருந்து அளித்து உபசரித்து உள்ளார். இதில், சரத் பவார், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், டிம்பிள் யாதவ் மற்றும் ஜெயா பச்சன், தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி மற்றும் டி.ஆர்.பாலு, ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் மிசா பார்தி, சிவசேனாவின் (யுபிடி) சஞ்சய் ராவத் மற்றும் பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கூட்டணியில் இடம் பெறாத ஆம் ஆத்மியை சேர்ந்த சஞ்சய் சிங் மற்றும் சந்தீப் பதக் ஆகியோரும் கலந்து கொண்டனர். சமீபத்தில், இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சி தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் வீட்டில் நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்டனர்.
அப்போது, பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்திற்கு எதிராக ஒன்றாக போராடுவோம் என அவர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். இந்த சூழலில், கார்கேவின் இரவு விருந்து நிகழ்ச்சி நடந்துள்ளது.
அதற்கு முன், இன்று காலை எதிர்க்கட்சி எம்.பி.க்களான ராகுல் காந்தி, சரத் பவார், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் நாடாளுமன்ற இல்லத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். எனினும், பாதிவழியில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.