புதுடெல்லி,
உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 9 இடங்களில், சஹாரா குழுமத்திற்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க துறை இன்று சோதனையில் ஈடுபட்டது.
சஹாரா குழுமம், 300-க்கும் மேற்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட எப்.ஐ.ஆர். பதிவுகள் போடப்பட்டு உள்ளன. வாடிக்கையாளர்களை, முதிர்வு காலம் முடிந்தும் தொகையை திருப்பி தராமல், வைப்புநிதி திட்டத்தில் மீண்டும் மீண்டும் பணம் போட செய்து பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது.
பெரிய தொகை மற்றும் கமிஷன் திரும்ப கிடைக்கும் என கூறி வைப்பு நிதியாளர்கள் மற்றும் ஏஜெண்டுகளுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், திருப்பி தராமல் மோசடி நடந்துள்ளது. திருப்பி கொடுப்பதற்கு போதிய பணம் இல்லாதபோதும், புதிய வைப்பு நிதிகளை சேகரிக்கும் பணியில் அந்த குழுமம் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, பினாமி சொத்துகளை உருவாக்கியும் மற்றும் தனிப்பட்ட செலவுகளில் ஈடுபட்டும் பணமோசடி நடந்து உள்ளது. இது தொடர்பாக ஒடிசா, பீகார் மற்றும் ராஜஸ்தானில் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் அமலாக்க துறை இன்று விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் 707 ஏக்கர் பரப்பிலான ரூ.1,460 கோடி மதிப்பிலான நிலம், 1,023 ஏக்கர் பரப்பிலான மற்றும் ரூ.1,538 கோடி மதிப்பிலான மற்றொரு நிலம் ஆகியவற்றை முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன என அமலாக்க துறை தெரிவித்து உள்ளது.